இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை ஆரம்பித்தது.
பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடியதால் அவர்களை பிரிக்க முடியாமல், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் திணறினர். அப்போது பந்துவீச வந்த சுழற்பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர், 15ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஃபகார் ஜமானை வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து 21ஆவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான இமாம்-உல்-ஹக் அடித்த பந்தை தாஹிரே கேட்ச் பிடித்து மற்றொரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன்மூலம் உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக ஆலன் டொனால்டு 38 விக்கெட்டுகள் வீழ்த்தியதே, உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளரின் அதிகபட்ச சாதனையாக இருந்துவந்தது.
நேற்றையப் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 309 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களை மட்டும் எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் அந்த அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பையும் இழந்துள்ளது.
டேல் ஸ்டெயில், மார்னே மார்க்கல் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்பிரிக்க அணியில், இம்ரான் தாஹிர் சுழற்பந்துவீச்சாளாராக தனி முத்திரை பதித்துவருகிறார். இந்த உலகக்கோப்பையில் விளையாடும் அதிக வயதான நபர் (40) தாஹிர் என்பது குறிப்பிடத்தக்கது.