தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனி ஸ்பெஷல்! #HBDMSDhoni - MS Dhoni

சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, கிரிக்கெட்... உலகத்தின் பட்டிதொட்டியெல்லாம் எளிதாகச் சென்று சேர்ந்தது. சச்சினை பார்த்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என ஏராளமானோர் நினைத்த இந்தியாவில், அவரைப் போல் ஒருவர் புகழ் பெறுவார் என யாராவது சொல்லியிருந்தால், யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், அன்று யாரைப் பார்த்து இந்த மனிதன் கிரிக்கெட் ஆட வந்தாரோ, இன்று அவரைப் பார்த்து சிறுவர்கள் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அவரது அடையாளம் ஜெர்சி நம்பர் 7. பெயர் மகேந்திர சிங் தோனி.

Dhoni

By

Published : Jul 7, 2019, 1:19 PM IST

இன்று 38ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தோனி குறித்து யார் பேசினாலும்,‘எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும், ஆட்டத்தைக் கணக்கிட்டு ஆடுவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே, கேப்டன் கூல்’ உள்ளிட்ட சில விஷயங்கள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைத் தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிராக ஆடினார். அந்த தொடரில் 183 ரன்கள் விளாசி இலங்கை அணியை துவம்சம் செய்வார். அந்தத் தொடரின்போது, அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பலிடம், முதல் 13 பந்துகளை நான் தாக்கு பிடித்துவிட்டால் என்னால் ஆட்டத்தை நிச்சயம் முடிக்க முடியும் என தோனி தெரிவித்துள்ளார்.

சேப்பலுக்கோ ஆச்சரியம். அது என்ன 13 பந்துகள் என..!

தோனி

ஆனால், தோனி சொன்னதுபோலவே அந்த தொடரில் 346 ரன்களை விளாசி இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அணியினரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த தொடரில் அதிக ரன்கள் விளாசி தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்டி பிளவர், சங்ககாரா, பவுச்சர் என மற்ற அணியின் விக்கெட் கீப்பர்கள், பேட்ஸ்மேன்களாகவும் தங்களை நிரூபித்துக்கொண்டிருந்த நேரத்தில், அம்மாதிரியான கிரிக்கெட்டர்கள் கிடைக்காமல் இந்திய அணி தவித்துக்கொண்டிருந்தது. அப்போது, கேப்டன் பதவிக்கு வந்த கங்குலியின் பார்வை தோனியின் மீது விழ, சடை முடியோடு வந்த தோனியோ முதல் சில போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு இன்னிங்ஸ்களை ஆடவில்லை. முதல் தர போட்டிகளிலும், இந்திய ஏ அணிக்காக ஆடிய போட்டிகளிலும் அசால்ட்டாக சிக்ஸர்களை விளாசிய தோனியால் சர்வதேச போட்டிகளில் ரன் குவிக்க முடியவில்லை. தெருக்களிலும், மைதானத்திலும் சிறுவர்கள் ஆடும் ஸ்டிரீட் கிரிக்கெட் ஸ்டைலில் ஆடும் தோனியை யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் பின்னாட்களில் தோனியின் ஸ்டைல் என்றால் அதுதான் என பேசியதெல்லாம் வரலாறு.

சதம் விளாசிய தோனி

தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் திடீரென டாப் ஆர்டர் ஆட வாய்ப்பு வழங்கப்படுகிறது. ‘இதற்காகத்தானே இத்தனை நாட்கள் காத்துக்கொண்டிருக்கிறாய் பாலகுமாரா’ என அனைத்து பந்துவீச்சாளர்களையும் விளாசி வெற்றியை தேடிக் கொடுத்தார். முதல் சதமே பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்தார். அன்றைய தினம் ஒரு செய்தி அனைவருக்கும் சொல்லப்பட்டது. இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பிரச்னை முடிந்துவிட்டது. அடுத்ததாக வெற்றிகளை குவிக்க தயாராவது மட்டும் தான் தேவை. அதுவும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்படுகிறது.

2007ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணப்படுகிறது. லார்ட்ஸ்’ல் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணி வெற்றிபெற 380 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோது, அனைவரும் மற்றுமொரு தோல்வி என எழுத தயாராக இருந்தார்கள். அதற்கேற்றாற்போல் இந்திய அணி 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது தான் தோனி என்னும் கதாநாயகன் களமிறங்குகிறான். தோல்வி உறுதி என நினைத்தவர்கள் தோனியின் நிதானமான ஆட்டத்தையும், டெய்லண்டர்களை வைத்துக்கொண்டு தோனி ஆடிய விதத்தையும் பார்த்து அசந்துபோனார்கள். அந்த ஆட்டம் தான் பிற்காலத்தில் தோனிக்கு கேப்டன்சி தேடி வருவதற்கு காரணமாகவும் அமைந்தது.

இதனையடுத்து, 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பெரும் தோல்வி. லீக் சுற்றிலே அடிவாங்கி வெளியேறியது. அதனையடுத்து, டி20 உலகக்கோப்பை தொடர். டிராவிட் கேப்டன்சியை கொடுத்துவிட்டார். உலகக்கோப்பைத் தொடரில் தற்போது தான் தோல்வியடைந்திருக்கிறோம். திரும்பவும் தோல்வியடைந்தால் என்ன ஆகும் என இந்திய கிரிக்கெட் வாரியமே கதி கலங்கியிருந்த சமயம். யாரை கேப்டனாக்குவது என்ற விவாதங்கள் பிசிசிஐ-க்குள் மேலோங்கியிருந்தபோது, அவர்களின் தேர்வாக தோனி இருந்தார். அந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே ஆடியிருந்தது. இதனால் இந்திய அணிக்கு முற்றிலும் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

டி20 உலகக்கோப்பையை வென்றபோது..

‘முழுக்க முழுக்க இளைஞர்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார் புதிய கேப்டன்?’ என பத்திரிகைகள் விமர்சித்தன. ஆனால், தோனிக்கு பக்கபலமாக அங்கே யுவராஜ் சிங் என்னும் தளபதி இருந்தார். அங்கே லீக் சுற்றுகளில் வெற்றிபெற்றாலும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு ஆஸ்திரேலியர்களை போல் ஆடும் யுவராஜ் சிங்கை சிறப்பாக பயன்படுத்தினார். பந்துவீச்சில் ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங், இசாந்த ஷர்மா என புதிய ரத்தங்கள் வந்தன. இறுதிப் போட்டியில் யாரும் எதிர்பாராத வண்ணம் ஜோகிந்தர் ஷர்மாவிடம் பந்தை கொடுத்து பாகிஸ்தானை தீர்த்துக்கட்டியது எல்லாம் தோனியின் அற்புதம்.

இதற்கிடையே, இளைஞர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி சீனியர்களை இவர் தொடர்ந்து ஒதுக்குவதாக சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் அணியின் நலனுக்காக தான் எடுத்த முடிவில் தோனி தீர்க்கமாகவே இருந்தார். அதுவும் அவரின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவிக்க முடியவில்லை என்றபோது, தானாக முன்வந்து ஓய்வை அறிவித்தது, விராட் கோலியின் டெஸ்ட் செயல்பாடுகளைப் பார்த்துவிட்டு பின்னர் ஒருநாள் போட்டிக்கான கேப்டன்சியை கொடுத்துவிட்டு அணியில் சக வீரராக விளையாடியது என தோனியின் செயல்பாடுகளே அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சவுக்கடி கொடுத்தன.

இந்தியாவின் மிகச்சிறந்த முன்னாள் கேப்டன்கள்

ஆஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியபோதும், அதனை கொண்டாடாமல் அமைதியாக இருந்ததன் மூலம் இனிமேல் இது தொடர்ச்சியாக நடக்கும் என உலக கிரிக்கெட்டுக்கு சத்தமில்லாமல் செய்தி அனுப்பியது எல்லாம் வெறித்தனமான சம்பவம். அதனையடுத்து யுவராஜ் - தோனி களத்தில் இருந்தால் வெற்றி நிச்சயம் என ரசிகர்கள் நம்ப தொடங்கினார்கள்.

அங்கிருந்து எல்லாம் சரியாக தான் சென்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை தொடரை வென்று சாதனை செய்தபோது உலகமே தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது. ஆனால், ஒருவரின் வெற்றி மட்டுமே அவர்களை மாவீரர்களாகவோ, காலத்தைக் கடந்து நிற்கும் பெயர்களாகவோ மாற்றாது. மிகப்பெரிய தோல்வியிலிருந்து மீண்டும் அரியணையில் ஏறியதால் தான் பாபர் இன்றும் வரலாற்றில் கொண்டாடப்படுகிறார். அதுபோல், தான் தோனிக்கும் சில ஆண்டுகள் சரியாக செல்லவில்லை.

தனக்கு மிகவும் பிடித்த சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்டது. கேப்டன்சியில் இருந்து விலகியாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக ஐபிஎல் தொடரில் புனே அணிக்கான கேப்டன்சி பதவியிலியிந்து வெளியேற்றப்பட்டதெல்லாம் எந்த ஒரு ஜாம்பவான் வீரருக்கும் நிகழக்கூடாத ஒன்று. ஆங்கிலத்தில்‘brutal’ என்ற வார்த்தை தான் சரியாக இருக்கும். புனே அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து தோனி வெளியேற்றப்பட்டதை அப்படி தான் கூற முடியும்.

சிஎஸ்கே அணிக்கு திரும்பியபோது...

ஆனால், தோனி என்கிற போர்வீரன் தனது நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தான். இரண்டு வருடங்கள் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை சரியாகஅமையவில்லை. அங்கிருந்து சிஎஸ்கே அணி திரும்பி வந்தது. சிஎஸ்கே அணியை சென்னை சிவப்பு கம்பள விரித்து வரவேற்றது. தோனி என்னும் ஆட்டக்காரனின் மிகச்சிறந்த ஆட்டம் இந்த சீசனில் வெளிப்படும் என ரசிகர்கள் உடனிருந்தனர்.

திரும்பி வந்துட்டோம்னு சொல்லு என்பதற்கு ஏற்ப தோனியின் மனைவி பேக் ஹோம் என தோனியிடம் பேசினார். ஆம், சென்னை தோனியின் இரண்டாம் வீடு தான். அதனால் தான் தோனி சிஎஸ்கே அணி திரும்பி வரும்போது கண்கலங்கினார். கேப்டன் கூல் என அழைக்கப்பட்ட தோனி கண்கலங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

சில நாட்களாக பதுங்கியிருந்த சிங்கம் பாயத் தொடங்கியதும், எந்த பத்திரிகைகள் தோனி முடிந்துவிட்டார், ஓய்வை அறிவிக்கப்போகிறார் என தங்கள் கற்பனைக்கு எழுதியதோ, அதே பத்திரிகைகள் தோனியை புகழத் தொடங்கினர்.

தோனி

ஆனால், தோனியோ எந்த வெற்றியையும் தலைக்கு ஏற்றமாட்டார். ஏன் வெற்றி மட்டுமல்ல, தோல்வியும் கூட தோனியை பாதிக்காது. சச்சினைப் பார்த்து கிரிக்கெட் ஆட தொடங்கினோம் என கூறிய வார்த்தைகளில் தற்போது மாற்றம் பெற தொடங்கியுள்ளது. இன்றைய சிறுவர்கள் தோனியை பார்த்து கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளோம் என பேசத் தொடங்கிவிட்டனர். சில நாட்களுக்கு முன்னாள் தோனி குறித்து கோலி பேசுகையில், ‘கடந்த 15 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டின் முகமாக அறியப்படுபவர். நான் சர்வதேச போட்டிகளில் ஆடும்போது தோனி தான் கேப்டன். தோனி தான் இன்றும் எனது கேப்டன்’என்று பேசினார்.அது தான் இந்திய கிரிக்கெட்டிலும், ரசிகர்களிடத்திலும் தோனி ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்.

தோனி - யுவராஜ்

28 வருடங்களுக்குப் பிறகு உலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்த தோனி, தற்போது கடைசி உலகக்கோப்பை தொடரில் ஆடி வருகிறார். அவருடன் தோனிக்கு பின் விக்கெட் கீப்பிங் செய்யப்போகும் ரிஷப் பண்ட் ஆடுகிறார். இது அனைத்தும் மிகவிரைவில் தோனி ஓய்வு பெறப்போகிறார் என்னும் செய்தியை ரசிகர்களிடம் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.

தான் வாங்கும் கோப்பையை மற்ற வீரர்களிடம் கொடுத்துவிட்டு, உடனடியாக ஓரம்போகும் தோனியிடம், விராட் கோலியும், மற்ற வீரர்களும் கோப்பையை திருப்பி கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கடைசியாக உலகக்கோப்பையை கொடுத்து கொண்டாட வேண்டும் என இப்போதே ரசிகர்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.

சச்சின் ஆட்டமிழந்ததையடுத்து தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிட்டுச் சென்ற பெரியவர்களையும் தோனி நம்ப வைத்துவிட்டார். சச்சின் டெண்டுல்கர், லாரா, டி வில்லியர்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தால் ஏற்படும் பயத்தைத் தாண்டி தோனி இருந்தால் சற்று கூடுதலாகவே எதிரணியினருக்கு பயம் ஏற்படும், பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரைகள் வழங்குவது, டிஆர்எஸ் முறையை தோனி ரிவ்யூ சிஸ்டம் என மாறியது, அனைத்திற்கும் மேலாக, தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கும், ரன் அவுட்டும் வேறு எந்த வீரருக்கும் கைகூடாதது. இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு வித்தைகளை இன்றும் செய்துகொண்டிருக்கும் ‘தல’ தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! #Happy_Birthday_MahiBhai

ABOUT THE AUTHOR

...view details