இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, பிசிசிஐ செயலாளர் ஜே ஷா ஆகியோர் உலகக்கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கங்குலி, 2021 உலகக்கோப்பை இது இந்தியாவுக்கான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச மகளிர் தினத்தன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான ஐசிசி மகளிர் டி 20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு, நடைபெறவிருக்கும், முதல் ஐசிசி போட்டி இதுவாகும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு இந்தியாவில் மீண்டும் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது.
"ஐ.சி.சி ஆண்கள் டி 20 உலகக் கோப்பையை நடத்துவது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது. 1987இல் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையை நடத்திய பின்னர், இந்தியா பல உலகளாவிய கிரிக்கெட் தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கிரிக்கெட்டை நேசிக்கும் எங்களது நாட்டில் விளையாட உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் உற்சாகமாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
மேலும், "நான் ஒரு வீரராக ஐசிசி தொடர்களில் பங்கேற்றுள்ளேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஐசிசி கிரிக்கெட் தொடர்களைப் பார்ப்பதுபோல், மற்ற விளையாட்டுகளைப் பார்க்கவில்லை என்பதை அனுபவத்திலிருந்து அறிவேன்.
நாங்கள் இப்போது உலகக்கோப்பைக்காகத் தயாராகும்போது நிர்வாகியாக இந்த மதிப்புமிக்க நிகழ்வை சிறப்பான முறையில் நடத்த எனது முழு பங்களிப்பையும் வழங்க ஆவலாக உள்ளேன்" என்று கூறினார்.