ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளிக்கும்விதத்தில் டேனியல் வையட் 16 ரன்களிலும், எல்லன் ஜோன்ஸ் இரண்டு ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் ஜோடிசேர்ந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் - நட்டாலியா சேவியர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பவுண்டரி விளாசும் ஹீதர் நைட் இதில் சிறப்பாக விளையாடிய ஹீதர் நைட் தனது நான்காவது அரைசதத்தைக் கடந்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சியளிக்குவகையில் நட்சத்திர வீராங்கனைகள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷாரா கிளன் அந்த அணியில் மூன்று வீராங்கனைகளைத் தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களோடு வெளியேறியதால் 19.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இத்தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் ஆட்டநாயகியாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சதமடித்து அசத்திய லிசெல் லீ... அரையிறுதியை நோக்கி தென் ஆப்பிரிக்கா!