தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 29, 2019, 8:27 PM IST

ETV Bharat / sports

உலகக் கோப்பை திருவிழா நாளை தொடக்கம்; கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா மோதல்

ஐசிசியால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்துப்படுகிறது. அந்த வகையில், 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில், நாளை தொடங்கவுள்ளது. முன்னதாக, 14 அணிகள் பங்கேற்றுவந்த இந்தத் தொடரில் இம்முறை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான்,இங்கிலாந்து, இந்தியா, இலங்கை,தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான்,வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்துக்கொள்கின்றன. இதில், என்ன சிறப்பம்சம் என்றால், அனைத்து அணிகளும் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளன

இதனால், ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் (9 அணிகள்)மோதும். இதில், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

ஜேசன் ராய் - பேயர்ஸ்டோவ்

இந்நிலையில், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ள முதல் போட்டியில், இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.சமீபகாலமாக இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிவருகிறது. அணியில் ஜானி பேயர்ஸ்டோவ், ஜேசன் ராய், பட்லர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல், ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் ஆகிய ஆல்ரவுண்டர்கள் அணியில் உள்ளது அந்த அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டையும் பலப்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்கா

மறுமுனையில், ரபாடா, லுங்கி நிகிடி, கிறிஸ் மோரிஸ் ஆகியோர், தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெற்றுருந்தாலும், நாளை போட்டியில் ஸ்டெயின் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இதனால், இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது ஒருபக்கம் இருக்க, கிரிக்கெட்டை கண்டுப்பிடித்த நாடு, இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என விமர்சனத்தை பெற்றுள்ள இங்கிலாந்து அணி, இம்முறை அந்த விமர்சனத்தை தகர்த்து எறியும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துவருகின்றனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான இப்போட்டி நாளை ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details