தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்து-மேற்கு இந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை - windies

உலகக்கோப்பைத் தொடரின் 19ஆவது லீக் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி பலம் பொருந்திய இங்கிலாந்தை இன்று எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து மேற்கு இந்திய தீவுகள் இன்று பலப்பரிட்சை

By

Published : Jun 14, 2019, 1:41 PM IST

உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் கடந்த மே 30ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலகக்கோப்பைத் தொடரை அட்டகாசமாகத் தொடங்கியது.

ஆனாலும் தனது அடுத்த ஆட்டத்தில் தர வரிசையில் எட்டாம் இடத்திலுள்ள பாகிஸ்தானிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அணியின் இரண்டு வீரர்கள் சதமடித்தும் சரியான ஃபினிசர்கள் இல்லாததாலும் பந்து வீச்சாளர்களால் எதிர்பார்த்த அளவு சோபிக்க முடியாததாலும் வெற்றி அருகில் வந்தும் வெற்றிக் கனியை சுவைக்க முடியாமல் போனது.

தவறுகளை குறைத்த இங்கிலாந்து தனது அடுத்த லீக் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை பந்தாடியது. இங்கிலாந்து அணி சார்பில் இதுவரை அதிகபட்சமாக ஜேசன் ராய் 215 ரன்கள் எடுத்துள்ளார்.

பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர்கள்

தனது முதல் லீக் போட்டியிலேயே மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை மிக எளிதில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியிலும் அற்புதமான தொடக்கத்தை கண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவின் இறுதி விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறியதால் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவுடனான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. மேற்கு இந்திய தீவுகள் அணியின் சார்பில் ஓ தாமஸ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெயில்

இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை சவுதாம்ப்டனிலுள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று எதிர்கொள்கிறது. பேட்டிங்குக்கு சாதகமான மைதானமாக கருதப்படும் இம்மைதானத்தில் எட்டு முறை 300-க்கு அதிகமான ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை ஆறு முறை நேருக்கு நேராக சந்தித்துள்ள இவ்விரு அணிகளில் இங்கிலாந்து ஐந்து முறையும் மேற்கு இந்திய தீவுகள் அணி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. இங்கிலாந்து மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details