உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது. தென்னாப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரையில், விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால் இன்று விளையாடும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் தோல்வியடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.
ஆம்லா, டி காக், டூ ப்ளஸிஸ், வாண்டர் டூசன், மார்க்ரம், மில்லர், டுமினி என சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தாலும் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் ரபாடா, இம்ரான் தாஹிர் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றியத் தேடித் தர வேண்டும்.
மறுமுனையில் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நடுவர்களின் தவறான முடிவுகளால் சிக்கி சின்னாபின்னாகியதையடுத்து, இந்தப் போட்டியில் வென்று வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.