தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

CWC19: வெஸ்ட் இண்டீஸ் அதிரடியை எப்படி சமாளிக்கப்போகிறது ஆஸ்திரேலியா?

நாட்டிங்ஹாம்: உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் பத்தாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது.

நாட்டிங்ஹாம்

By

Published : Jun 6, 2019, 10:12 AM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் வலிமையான அணிகளாக கணிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி மோதவுள்ளதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்

உலகக்கோப்பைத் தொடரின் தொடக்கத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவராலும் பேசப்பட்டது. அதற்கேற்றார்போல் பழைய வீரர்களான கிறிஸ் கெய்ல், ரஸல் என முக்கிய அனுபவ வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டனர். நடுவரிசையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக லாராவை போல் ஆடும் டேரன் பிராவோ, தொடக்கத்தில் அதிரடி மட்டுமல்லாமல் கிளாசிக் ஷாட்களை ஆட ஹோப், தேவைக்கேற்ப ஆட்டத்தை மாற்றுவதற்கு நிகோலஸ் பூரான், ஹெட்மயர் கொண்டுவரப்பட்டனர்.

தாமஸ்

2015ஆம் ஆண்டில் கத்துக்குட்டி கேப்டனாக வலம் வந்த ஹோல்டர், இந்த ஆண்டில் வலிமையான இங்கிலாந்து அணியை வீழ்த்தி கெத்து கேப்டனாக வேறு மாதிரி வந்திறங்கியுள்ளார். தொடரின் பயிற்சி போட்டியிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக 421 ரன்கள் அடித்து மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை கொடுத்தது. போதாக்குறைக்கு முதல் போட்டியில் பாகிஸ்தானை பவுன்சர்களால் வீழ்த்தி பந்துவீச்சிலும் தங்களை நிலை நிறுத்திக்கொண்டது. ஐபிஎல் தொடரின்போது சொதப்பிய ஹெட்மயர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். நடுவரிசையில் விக்கெட் வீழ்ந்தால், தடுப்பாட்டம்... ரன்களை சேர்க்க வேண்டும் என்றால் அதிரடி ஆட்டம் என வெரைட்டி காண்பித்து எதிரணியினரின் கூடாரத்தில் கிலியை ஏற்படுத்துகிறார்.

ரஸல்

அதேபோல், ஆஸ்திரேலியா அணியில் கடந்த வருடம் 'பேச்சாடா பேசுனீங்க' என அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவை பொளந்துகட்ட, அதற்கு எதிர்மாறாக 'எவன்டா அப்போ பேசுனது' என தற்போது பழி வாங்குவதற்கு காத்திருப்பதுபோல் பாய்ந்து வருகிறது. இந்தியாவில் வைத்து இந்திய அணியை ஒருநாள் தொடரில் வென்றது, பாகிஸ்தானை அபுதாபியில் புரட்டியது என அனைத்து வீரர்களும் ஒன்றாக ஃபார்மிற்கு வர, தடைக்கு பின்னர் அணிக்கு திரும்ப காத்திருந்த வார்னர் ஐபிஎல் தொடரில் காட்டடி காட்ட... சர்வதேச கிரிக்கெட் அணிகளும், ரசிகர்களும் உலகக்கோப்பைனா மட்டும் ஆஸ்திரேலிய எப்படிடா இப்படி ரெடியாகுறீங்க? என கேட்கத் தொடங்கினார்கள். ஸ்மித், வார்னர் ரிட்டர்ன்ஸ்... ஸ்டார்க், கம்மின்ஸ், கவுல்டர் நைல், பெஹ்ரண்டார்ஃப் என பந்துவீச்சாளர்கள் அணி வகுத்து தாக்க ஆயத்தமானார்கள்.

ஆஸ்திரேலியா

போதாக்குறைக்கு பத்திரக்கைகளும், இங்கிலாந்து ரசிகர்களும் ஆஸ்திரேலியர்களை தொடர்ந்து சீண்டி வருகிறார்கள். ஆஸ்திரேலியர்களுக்கு என ஒரு குணமுண்டு.. ஒரு முறை ரிக்கி பாண்டிங்கிடம் தொடர்ந்து நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் என்ன எனக் கேட்கையில், ரசிகர்கள் தொடர்ந்து எனக்கு எதிராக சத்தம் எழுப்பினால், அந்த சத்தத்தை அடக்குவதற்கு ஒரு பவுண்டரியோ அல்லது சிக்ஸரோ அடித்தால் போதும். ரசிகர்கள் அமைதியாவார்கள் என்றார். அதுபோல் தான் தொடர்ந்து ஆஸ்திரேலியர்கள் செய்லபட்டு வருகிறார்கள். வார்னர், ஸ்மித்தை ஸ்லெட்ஜிங் செய்வதால் அவர்கள் மேலும் ஆக்ரோஷத்துடன் ஆடி வருகிறார்கள்.

வார்னர்

இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் முதல் இரண்டு முறை கோப்பையை வென்ற அணியான வெஸ்ட் இண்டீஸ் தனது பழைய ஆட்டத்தை மீட்டெடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் தான் ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பையை வென்று உலகிற்கு தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஸ்மித் - வார்னர்

மேலும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பவுன்சர் மட்டும் எங்களது பலம் அல்ல எனக் கூறி இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளார். நாட்டிங்ஹாம் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படும் எனக் கூறியுள்ளதால், இரு சமபலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் இந்த போட்டி சுவாரஸ்யத்தின் எல்லைக்கே கூட்டி செல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details