உலகின் 10 தலைசிறந்த கிரிக்கெட் விளையாடும் நாடுகள்... ஒவ்வொரு அணிக்கும் 15 சிறந்த வீரர்கள். சண்டைக்கு செல்வதைப்போல் ஒவ்வொரு அணி வீரர்களும் தயாராகி இங்கிலாந்து சென்றுவிட்டனர். இனி சண்டை செய்வது மட்டும்தான் வேலை. உலகக்கோப்பை என்று வந்துவிட்டால் எந்த ஒரு அணியும் கத்துக்குட்டி அணி கிடையாது. 2007ல் வங்கதேசமும், அயர்லாந்தும் இந்தியா, பாகிஸ்தான் உலகக்கோப்பைக் கனவினை உடைத்து எறிந்துவிட்டன. அதனால் இங்கே எந்தப் போட்டியிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும். சென்னையின் மஞ்சள் நிறங்கள், நீல நிறங்களாக மாறத் தொடங்கிவிட்டன. உலகக்கோப்பை ஜுரம் தொடங்கிவிட்டது. பல திக் திக் நிமிடங்கள் ரசிகர்களுக்கு நிச்சயம் காத்திருக்கிறது.
கிரிக்கெட்டின் தாய் வீடான இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகர் மைதானங்களில் உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. கிரிக்கெட்டை உருவாக்கியவர்கள் என்ற பெயர் இருந்தாலும், இங்கிலாந்து அணி இதுவரை ஒரு முறைக்கூட உலகக்கோப்பையை வென்றதில்லை. இதனை வைத்தே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர், பியர்ஸ் மோர்கனை ட்விட்டரில் கலாய்த்துள்ளார். எனவே இந்த முறை இயான் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வாகை சூடுமா என இங்கிலாந்து பத்திரிகைகள் இப்போதே எழுதத் தொடங்கிவிட்டன.
கிரிக்கெட்டை உருவாக்கியர்கள் இங்கிலாந்து நாட்டினர் என்றால், அந்த கிரிக்கெட்டை மதமாக பார்ப்பவர்கள் இந்திய மக்கள். 130 கோடி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக விராட் கோலி தலைமையிலான இந்தியப் படை இங்கிலாந்து சென்றுவிட்டது. 1983ல் கபில் தேவ் தலையிலான இந்திய அணியினர் கைப்பற்றிய உலகக்கோப்பை இந்திய கிரிக்கெட் சரித்திரத்தை புரட்டிப் போட்டது. அதேபோல் மீண்டும் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னால் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு மிகப்பெரிய அடி. இப்போது மட்டுமல்ல, அதற்கு முன்னாலும்கூட அடிதான் வாங்கிவந்தோம். ஆனால் விராட் கோலி என்னும் இந்திய கிரிக்கெட் இளவரசன் ஒவ்வொரு முறை இங்கிலாந்து தொடரில் விளையாடி வருகையிலும் தன்னை சிறந்த கிரிக்கெட்டராக வளர்த்துக்கொண்டார். இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ராகுல் டிராவிட்டுக்கு பின்னர் தனி ஒருவனாக எதிர்த்து நின்றது உலகக் கிரிக்கெட் ரசிகர்களால் உற்றுநோக்கப்பட்டது.
விராட் கோலி என்னும் கிரிக்கெட் இளவரசன்:
முதன்முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியை முதன்முறையாக வழி நடத்துகையில் உலகக்கோப்பையில் வெற்றி. தொடர்ந்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அணியில் இருந்தாலும், அந்த வெற்றியின்போது சீனியர் வீரர்கள் கண்ணீருடன் கம்பீரமாய் மைதானத்தை சுற்றி வருகையில், எனக்கு மிகப்பெரிய உணர்வுகள் ஏற்படவில்லை என விராட் கோலி சமீபத்தில் கூறியிருந்தார்.