கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை பந்துவீச்சாளர்கள் கேட்ச், லெக் பை விக்கெட், ரன் அவுட் என எப்படி விக்கெட்டுகள் எடுத்தாலும் ஸ்டம்புகள் சிதற போல்டாகி வெளியேறுவதைப் பார்ப்பதுதான் ரசிகர்களுக்கு அலாதி ப்ரியம். அதேபோலான இன்பம்தான் யார்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும்போதும் ஏற்படும். இந்த ஆண்டு தொடங்கவுள்ள உலகக்கோப்பை தொடர் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வதற்கு ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் துருப்புச் சீட்டு.
இந்த இளைஞன் பந்துவீச வந்தால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மன்களும் பதட்டமாவார்கள். எதிரில் உள்ள பேட்ஸ்மேனோடு ஒவ்வொரு பந்துக்கும் விவாதம் செய்வார்கள். எதிரணியின் ரசிகர்கள் மனதில் பயம் ஏற்படும். ஏன் இவரது பந்துவீச்சில் விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் உட்பட அனைவரும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். இவரின் பந்துவீச்சில் முதல் நான்கு அடிகள் நடந்து வருவார்... அடுத்த நான்கு அடிகளில் சிறிதாக எம்பி வருவார்... கடைசி நான்கு அடிகளின்போது முழுமையான பலத்தைக் கொண்டு தனக்கே உரிய ஸ்டைலான பந்துவீச்சில் கையிலிருந்து வெளியேறும் பந்து, கண் இமைக்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்களைத் தாண்டிச் சென்றுவிடும். ஆம் அந்த இளைஞன் தான் பூம்... பூம்... பும்ரா!
முதன்முதலாக இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சு என்றால் எவ்வாறு வீச வேண்டும் என செய்து காட்டியவர் கிரேட் கபில் தேவ். அவருக்கு பின் வெங்கடேஷ் பிரசாத், ஸ்ரீநாத் என்று சிலர் வந்தாலும் ஜாகீர் கான்தான் சர்வதேச பேட்ஸ்மேன்களை அற்புதமான வேகப்பந்துகளால் திணறடித்தார். அவருக்குப் பின் வந்தவர்களில் சிலர் சிறப்பாக வீசினாலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை. பின்னர்தான் பும்ரா அறிமுகமாகிறார். 2016ஆம் ஆண்டு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணப்படுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணிக்கு தோல்வி. தொடர்தான் தோற்றுவிட்டோம். மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று நினைக்கையில் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விலகுகிறார். ஐந்தாவது போட்டியில்தான் பும்ரா என்னும் சிங்கம் களமிறங்குகிறது.
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள். அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் சிதறடித்தாலும் பும்ராவின் பந்துகளை எதிர்கொள்ள திணறினர். 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். போட்டியில் இந்திய அணி வெற்றி. போட்டிக்கு பின்னர் அப்போதைய கேப்டன் தோனி செய்தியாளர் சந்திப்பில் பேசியது கிரிக்கெட் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அவர் பேசிய வார்த்தைகள் இவை... 'இந்தத் தொடரின் சிறந்த தேடல் பும்ராதான். அவர் சிறந்த யார்க்கர் பந்துகளை வேகமாக வீசுகிறார். குறைந்த ஓவர் போட்டிகளுக்கு யார்க்கர் பந்துகளை சிறப்பாக வீச வேண்டும்' என்றார். எந்த வீரரையும் முதல் போட்டியிலேயே அதுவரை தோனி புகழ்ந்தது கிடையாது. அப்போதே பும்ரா உலக கிரிக்கெட்டை ஆளப் போகிறார் என தெரிந்துவிட்டது.
ஒரு கதை சொல்லட்டா சார்...
அகமதபாத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது சிறுவயதிலேயே தன் அப்பாவை இழக்கிறான். பின்னர் அம்மாவும், சகோதரியும்தான். அந்த அம்மாவால் குழந்தைகளுக்கு படிப்பை மட்டும்தான் கொடுக்க முடிகிறது. அந்தச் சிறுவனுக்கு கிரிக்கெட்டின் மேல் காதல். ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு படிப்பையும் தாண்டி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போகிறேன் எனக் கூறுகிறார். அதற்கு அவரது அம்மா சிறு தயக்கத்துடன் அனுமதிக்கிறார்.
16 வயதின்போது தனது சைக்கிளில் 30 நிமிடங்கள் பயணம் செய்து தினமும் பயிற்சி மேற்கொள்கிறான் அவன். பிறகு சைக்கிள் உடைகிறது. பயணம் செய்வதற்கு கையிலும், பையிலும் காசு கிடையாது. அதனால் தினமும் பயிற்சி செய்வதற்காக நடந்தே செல்கிறான். கிரிக்கெட் விளையாடுவதற்கு அம்மாவிடம் நைக் (nike) ஷூ கேட்கிறான். வாங்குவதற்கு பணம் இல்லை. அதனால் 'நானே சம்பாதித்து பந்தை வாங்கிக் கொள்கிறேன்' என உறுதியேற்கிறார் அந்தச் சிறுவன்! வாழ்வின் கொடிய மிருகம் வறுமைதானே? அதை வெல்வதற்காகத்தானே இங்கே பெரும்பாலானோர் போராடுகிறோம்
பின்னர் 'உங்கள் கையில் பந்து இருந்தால் என்ன பண்ணுவீர்கள்?' என பயிற்சியாளர் எல்லோரிடமும் கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுவன், யாரும் வீச முடியாத அளவிற்கு வேகமாக வீசுவேன் என்கிறான். தொடர்ந்து பயிற்சியால் சிறப்பாக செயல்படுகிறான். தொடர்ந்து 19 வயதுக்குட்படோருக்கான குஜராத் கிளப் உடன் இணைந்த கிளப்பிற்காக ஆடுகிறான். அதற்குப் பிறகு நடைபெற்ற சூரத் அணிக்கு எதிரான போட்டியில் அவரின் அதிரடியான யார்க்கர்களுக்கும், பவுன்சர்களுக்கும், வேகத்திற்கும் ஈடுகொடுக்க முடியாத பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து வெளியேறுகின்றனர். போட்டியின் முடிவில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். இதனையடுத்து 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைக்கிறது. ஆனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
பின்னர் பயிற்சியின்போது அந்தச் சிறுவன் வீசிய யார்க்கர், ஆடும் லெவனில் உள்ள வீரரின் கால்களை பதம் பார்க்கிறது. காலில் காயம் ஏற்பட்டதால் ஆட்டத்திற்கு முதல் நாளே அந்த வீரர் விலகுகிறார். அவருக்கு பதிலாக அந்தச் சிறுவன் களமிறங்குகிறார்! வாய்ப்பை உருவாக்குவது இதுதானோ...?
பின்னர் குஜராத் அணிக்காக முதல்தர போட்டியில் பங்கேற்கிறார் அந்த இளைஞன்... ஆம் அவர் அப்போது 19 வயது இளைஞன். அந்த இளைஞனின் யார்க்கர்களை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். அதனைப் பார்த்த இந்திய முன்னாள் வீரர் நெஹ்ரா, ஓடிச் சென்று பார்திவ் படேலிடம் 'இவன் நிச்சயம் இந்தியாவுக்காக ஆடுவான்' என்கிறார். ஆனால் பார்திவ் அதனை சட்டை செய்யவில்லை.
அதன்பிறகு அந்த இளைஞன் பயிற்சியில் செய்வதை ஒரு பிரபலமான பயிற்சியாளர் பார்க்கிறார். தொடர்ந்து துல்லியமான யார்க்கர் வீசும் அவரது திறமைகளைப் பார்த்து வாவ் என வியக்கிறார். தொடர்ந்து அங்கிருந்து பார்த்திவ் படேலுக்கு ஃபோன் போகிறது. அடுத்த இரண்டு நாட்களில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவருடன் ஒப்பந்தம் செய்கிறது.
பந்துவீசிய அந்த இளைஞன்தான் தற்போது சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் பும்ரா...! அந்தப் பயிற்சியாளர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட்.