கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்றது. லீக் சுற்றில் இந்திய அணி சிறப்பாக ஆடினாலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறதிப் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
240 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணியில், பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட குளறுபடிகள்தான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. தோனியை ஏன் 7ஆவது வரிசையில் களமிறக்கினீர்கள் போன்ற பல்வேறு கேள்விகள் ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டன.
இதனால், தலைமை பயிற்சியாளர் பதிவியில் இருக்கும் ரவி சாஸ்திரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை பயிற்சியாளராக நியக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க தற்போது பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதனால், ஜூலை 30ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்
பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பங்கள் அனுப்புமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
உலகக் கோப்பை தொடருக்காக ரவி சாஸ்திரி உட்பட பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கார், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோரது பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆனால், இவர்கள் பிசிசிஐயின் எதிர்பார்ப்பை அவர்கள் பூர்த்தி செய்யாததால், இவர்களது பதவி தற்போது பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
அதேசமயம், பயிற்சியாளர் பதிவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், 60 வயதுக்கு குறைந்தவராகவும் அவர்கள், 30 டெஸ்ட் முதல் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இருக்க வேண்டும் என பிசிசிஐ நிபந்தனை வைத்துள்ளது. இதனால், ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல, ராகுல் டிராவிட், ஜாகிர் கான், ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம், இந்த பதவிக்கு மீண்டும் ரவி சாஸ்திரி, சஞ்சய் பங்கார், பரத் அருண் ஆகியோர் விண்ணப்பம் அனுப்புவார்களா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததையடுத்து, ”பேசாம நீங்க கமெண்ட்ரிக்கே போய்டுங்க சிவாஜி” என்று ரவிசாஸ்திரியிடம் ரசிகர்கள் கொடுத்த வலியுறுத்தல் ஒருவேளை பிசிசிஐ காதில் விழுந்திருக்கிறதோ என்னவோ?