உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து, வேல்ஸ் நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் ஆட பணித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 3, ஆரன் பின்ச் 6, கவாஜா 13, மேக்ஸ்வெல் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 38 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் சிறிது நேரம் தாக்குபிடித்த ஸ்டோஸ்னிஸும் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
யார் சென்றால் என்ன நாங்க இருக்கிறோம் என்பது போல் ஸ்டீவ் ஸ்மித்தும், அலெக்ஸ் கேரியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் ஆறாவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் சேர்த்திருந்தபோது அலெக்ஸ் கேரி 45 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் வந்த பந்துவீச்சாளரான நாதன் கோல்டர்-நைல் யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆடினார். இதே வேளையில் ஸ்மித் 73 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய கோல்டர் நைல் 60 பந்துகளில் 92 ரன்கள் (8 பவுண்டரி, 4 சிக்சர்கள்) ஆட்டமிழந்தார்.