தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 5, 2020, 7:10 PM IST

ETV Bharat / sports

ஆறாவது முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா!

மகளிர் டி20 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி, ஆறாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Australia in the final of the Women's T20 World Cup for the sixth time
Australia in the final of the Women's T20 World Cup for the sixth time

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி, தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அலீசா ஹீலி, பெத் மூனி அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். இதில் ஹீலி 18 ரன்களிலும், பெத் மூனி 28 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் மெக் லெனிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார்.

பந்தை சிக்சருக்கு விளாசிய மெக் லெனிங்

தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய லெனின் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரை சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து, 134 ரன்களை எடுத்திருந்தது. இதனிடையே ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 13 ஓவர்களில் 98 ரன்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் லீ 10 ரன்களிலும், கேப்டன் வான் நிக்கோர்க் 12 ரன்களிலும், சன் லூஸ் 21 ரன்களிலும், ப்ரீஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் மறுமுனையில் லாரா வால்வார்ட் இறுதிவரை போராடியும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

தென் ஆப்பிரிக்க அணியின் லாரா வால்வார்ட்

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 13 ஓவர்கள் முடிவில் 92 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தாண்டிற்கான மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய மெக் லெனிங் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் வருகிற 8ஆம் தேதி நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மகளிர் டி20 உலகக்கோப்பை: மழையால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி

ABOUT THE AUTHOR

...view details