தமிழ்நாடு

tamil nadu

ஹர்திக் பாண்டியாவின் வாயை அடக்கிய ஜாகிர் கான்!

By

Published : Oct 9, 2019, 11:45 AM IST

தன்னை கலாய்க்கும் விதமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஹர்திக் பாண்டியாவிற்கு ஜாகிர் கான் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Zaheer Khan

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராகத் திகழ்ந்த ஜாகிர் கான் நேற்று முன்தினம் தனது 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். 2011ஆம் ஆண்டில் உலகக்கோப்பை ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்ல இவர் மிக முக்கிய காரணமாக இருந்தார். தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம், இந்திய அணிக்கு பல வெற்றிகளையும் மறக்க முடியாத தருணங்களையும் ஏற்படுத்தித் தந்த இவருக்கு சச்சின், சேவாக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஹர்திக் பாண்டியாவின் பதிவு

இதில், வளர்ந்துவரும் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், ஜாகிர் கான் வீசும் பந்தை தான் பவுண்டரிக்கு அனுப்புவது போன்ற காணொலியை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். மேலும் அந்தப் பதிவில், பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாகிர், நான் இந்தப் பந்தை அடித்து விரட்டியது போலவே நீங்களும் செய்வீர்கள் என நம்புகிறேன் என கலாய்த்திருக்கிறார். ஒரு மூத்தவருக்கு இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பீர்களா என ஹர்திக் பாண்டியாவை ஜாகிர் கான் ரசிகர்களும் இணையவாசிகளும் விமர்சித்தனர்.

ஜாகிர் கானின் பதிலடி

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் ட்வீட்டிற்கு ஜாகிர் கான் பதிலளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஜாகிர் கான், பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தற்கு மிக்க நன்றி ஹர்திக் பாண்டியா. என்னுடைய பேட்டிங் திறன் ஒருபோதும் உங்கள் அளவிற்கு இருக்காது. ஆனால், அந்தப் போட்டியில் நீங்கள் பவுண்டரி அடித்தப் பிறகு எனது அடுத்தப் பந்தை எதிர்கொண்ட அளவிற்கு எனது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக இருந்தது என பதிலளித்தார்.

ஜாகிர் கானின் பதில் ட்வீட் தற்போது ஹர்திக் பாண்டியாவின் வாயை அடைக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்திய அணிக்காக 92 டெஸ்ட், 200 ஒருநாள், 17 டி20 போட்டிகளில் விளையாடி 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக விளையாடிவருகிறார். அதேசமயம், கடந்த சீசனில் அந்த அணியின் செயல் இயக்குநராக ஜாகிர் கான் நியக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உங்கள மறக்கமாட்டேன் பிரதர்... ஜாகிர் கான் பிறந்தநாள் குறித்து கிரேம் ஸ்மித் ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details