இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தபோது இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் ஏராளமான தவறுகளை மேற்கொண்டனர். குறிப்பாக, ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கைக்கு வந்த கேட்சை நழுவவிட்டனர். முதலில், சாஹல் வீசிய 16ஆவது ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் தந்த கேட்ச்சை, ஷார்ட் ஃபைன் லெக் திசையில் இருந்த வாஷிங்டன் சுந்தர், தவறாகக் கணித்தார். லைட் வெளிச்சத்தால் அவர் அந்த தவறை மேற்கொண்டார் என்று பார்த்தால் அதன்பிறகு, 17ஆவது ஓவரின் முதல் பந்தில் மீண்டும் ஹெட்மயர் தந்த கேட்சை வாஷிங்டன் சுந்தர் நழுவவிட்டார்.
இதைத்தொடர்ந்து, அதே ஓவரில் பொல்லார்டு அடித்தப் பந்தை லாங் ஆன் திசையிலிருந்த ரோஹித் சர்மா பிடிக்க முயற்சித்தார். ஆனால் தான் பவுண்டரி லைனை நெருங்குவதால் அந்தப் பந்தை மைதானத்துக்குள்ளே வீசி நான்கு ரன்களை தடுத்தார். இப்படி சிறப்பாக ஃபீல்டிங் செய்து சிக்சரை தடுத்த ரோஹித் சர்மா, அடுத்த பந்திலேயே பொல்லார்டு தந்த எளிதான கேட்சை தவறவிட்டதால் பந்து சிக்சருக்குச் சென்றது.