பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி மேட்ச் ஃபிக்சிங் விவகாரத்தில் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதால், மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், '' மேட்ச் ஃபிசிங்கை ஏன் கிரிமினல் குற்றமாக மாற்றக் கூடாது? மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனை வழங்குவதோடு, குற்றவாளிகளின் சொத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தவறு செய்பவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கும்.
பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம்) நிர்வாகிகளும், ஆலோசகர் ரிஸ்வியும் திறமையற்றவர்களாக இருக்கிறீர்கள். ஏன் இதுவரை மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபடுவோருக்காக சட்டம் இயற்றப்படாமல் உள்ளது'' என கடுமையாக விமர்சித்திருந்தார்.