இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் ஆகியோருடன் நேரலையாக உரையாடிவருவதைத் தற்போது வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் இந்திய வீரர் ரோஹித் சர்மாவுடன் நேரலையாக உரையாடினார்.
அந்தவகையில், அவர் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷேசாத்துடன் உரையாடினார். அப்போது பீட்டர்சன், பிஎஸ்எல் தொடரில் மோசமாக விளையாடியது குறித்து அகமது ஷேசாத்திடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அகமது ஷேசாத், "நான் இந்த தொடரில் என்னால் முடிந்தளவிற்கு எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். ஆனால் முதன்முறையாக மூன்றாவது வரிசையில் களமிறங்கியதால்தான் என்னால் சரியாக விளையாட முடியவில்லை" என பதிலளித்தார். இதற்கு பீட்டர்சன், "நான் ஒன்றும் பத்திரிகைக்காரர் இல்லை, உனது நண்பன்தான். எனவே இதுபோன்ற குப்பைத்தனமான பதிலில் சாக்கு சொல்ல வேண்டாம்.
முதல் நான்கு வரிசையிலும் பேட்டிங் செய்ய உங்களுக்கு விருப்பமில்லையென்றால், என்னை பொறுத்தவரையில் நீங்கள் அடுத்த சீசனிலிருந்து 13ஆவது வரிசையில் களமிறங்குகள்" என பதிலளித்தார். அடுத்த சீசனிலிருந்து பேட்டிங்கே செய்ய வேண்டாம் என்பதை உணர்த்தும் வகையில், அகமது ஷேசாத்தை கலாய்த்த பீட்டர்சனின் பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஏழு போட்டிகளில் விளையாடிய அகமது ஷேசாத் 61 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதையும் படிங்க:ரோஹித் ஷர்மாதான் எனது ஹீரோ... பாகிஸ்தான் இளம் வீரர்!