தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

”ஓய்வு என்ற வார்த்தையே உங்களுக்கு இல்லை!” - ரெய்னாவுக்கு பிரதமர் கடிதம்! - சின்ன தல ரெய்னா

டெல்லி : சுதந்திர தினத்தன்று ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரெய்னாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

you-are-way-too-young-and-energetic-to-retire-pm-modi-writes-to-raina
you-are-way-too-young-and-energetic-to-retire-pm-modi-writes-to-raina

By

Published : Aug 21, 2020, 1:06 PM IST

சுதந்திர தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த சில நிமிடங்களிலேயே ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களாக வலம் வந்த இருவரும் ஒரே நாளில் ஓய்வை அறிவித்தது, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னேற்றத்திற்காக தோனியைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை நேற்று தோனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் தோனியுடன் ஓய்வை அறிவித்த ரெய்னாவுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ''ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று உங்கள் வாழ்வின் கடினமான முடிவினை எடுத்துள்ளீர்கள். நான் ஓய்வு என்ற வார்த்தையை உங்களுக்கு பயன்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் நீங்கள் இன்னும் இளமையாகவும், களத்தில் உற்சாகம் நிரம்பியவராகவும் இருக்கிறீர்கள். கிரிக்கெட் களத்தில் கிடைத்த மிகச் சிறந்த அனுபவங்களுக்கு பிறகு, வாழ்க்கையின் அடுத்த இன்னிங்ஸுக்கு தயாராகி விட்டீர்கள்.

ரெய்னா

வாழ்வின் உயிர் மூச்சாக கிரிக்கெட் உங்களுக்கு இருந்தது. கிரிக்கெட் மீதான உங்களின் ஆர்வம், முராட் நகர் தெருக்களிலும், லக்னோ மைதானங்களிலும் சிறு வயதில் ஆடியபோதே ஏற்பட்டு விட்டது. அங்கிருந்து தொடங்கி, இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் களம் கண்டுள்ளீர்கள்.

வரும் காலங்களில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமே நீங்கள் பார்க்கப்பட மாட்டீர்கள். மிகவும் தேவையான பந்து வீச்சாளராகவும், சில சமயங்களில் இந்திய அணியின் கேப்டனாகவும் பார்க்கப்படுவீர்கள். உங்களின் ஃபீல்டிங் பார்ப்பவர்களுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். சர்வதேச போட்டிகளில் நீங்கள் பிடித்துள்ள கேட்ச்கள் அதிகமாகப் பேசப்படும். ஃபீல்டிங்கின்போது நீங்கள் தடுத்த ரன்களை எண்ணினால் பல நாள்கள் தேவைப்படும்.

ரெய்னா

பேட்ஸ்மேனாக அனைத்து விதமாக போட்டிகளிலும் தடம் பதித்திருந்தாலும், டி20 கிரிக்கெட்டில் உங்கள் பங்கு மகத்தானது. ஏனென்றால் நேரத்திற்கு தகுந்தாற்போல் உடனடியாக நமது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதால், டி20 வகைப் போட்டிகள் மிகவும் கடினமானவை.

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் உங்களின் பங்கை இந்தியா என்றும் மறக்காது. அதிலும் அகமதாபாத்தின் மொடீரா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியை நான் நேரில் பார்த்தேன். அந்தப் போட்டியில் நாம் வெற்றி பெற்றதற்கு உங்களின் பங்கு அளப்பறியது. நான் நேரில் பார்த்த உங்களின் கவர் ட்ரைவ் ஷாட்களை, ரசிகர்கள் நிச்சயம் மிஸ் செய்வார்கள். அப்போட்டியை நான் நேரில் பார்த்தது என் அதிர்ஷ்டம்.

விளையாட்டு வீரர்கள், ரசிகர்களால் கொண்டாடப்படுவது களத்தில் பார்க்கும் காட்சிகளால் மட்டுமல்ல. களத்திற்கு வெளியே பார்க்கும் காட்சிகளாலும்தான். உங்கள் போராட்ட குணம், இளைஞர்கள் பலரையும் ஊக்குவித்துள்ளது. கிர்க்கெட் வாழ்க்கையில் காயம், பின்னடைவு என பல சவால்களை சந்தித்தாலும், எல்லாவற்றையும் கடந்து முன்னேறியுள்ளீர்கள்.

சுரேஷ் ரெய்னா என்றுமே சொந்த வெற்றிக்காக ஆடியதில்லை. எப்போதும் அணியின் நலனுக்காகவும் வெற்றிக்காகவும் ஆடியவர். எதிரணி வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தும்போது முதல் ஆளாக ஆக்ரோஷத்துடன் நீங்கள் கொண்டாடுவதை நாங்கள் பார்த்துள்ளோம்.

சமூகத்தின் மீதும் எப்போதும் அக்கறை கொண்டவர் நீங்கள், மக்களின் முன்னேற்றம், தூய்மை இந்தியா ஆகிய திட்டங்களுக்கு ஆதரவளித்ததோடு, பலருக்கும் எண்ணற்ற உதவிகளை செய்துள்ளீர்கள். இந்தியாவின் பாரம்பரியத்தில் நீங்கள் கலந்துள்ளது பெருமையாக உள்ளது.

கிரிக்கெட்டில் எந்த அளவிற்கு நீங்கள் வெற்றி பெற்றீர்களோ, அதே அளவிற்கு எதிர் காலத்திலும் மகத்தான வெற்றிபெற வாழ்த்துகள். இப்போதாவது உங்களின் மனைவி பிரியங்கா, குழந்தைகள் கிரேசியா, ரியோ ஆகியோருடன் நேரம் செலவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

இந்திய இளைஞர்களை ஊக்கப்படுத்தியதற்கும், கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல முயன்றதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தோனியைப் போன்று மற்றொருவர் கிடையாது’- மிதாலி ராஜ்!

ABOUT THE AUTHOR

...view details