கரோனா பெருந்தொற்றால் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் தங்களது நேரத்தை குடும்பத்தினருடனும், சமூக வலைத்தளங்களிலும் செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக வலம் வரும் அடில் ரஷித், தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, தற்போது கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு, என்னை பொறுத்த வரையில் இந்திய அணியின் கோலியை விட, பாகிஸ்தானின் பாபர் ஆசாமே சிறந்தவர் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் கூறுகையில், 'இது முகவும் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு என்னுடைய பதிலானது பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாமே சிறந்த வீரர் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் மிகச்சிறந்த வீரர் தான். ஆனால் தற்போதுள்ள ஃபார்ம் படி என்னுடைய தேர்வு பாபர் ஆசாம் தான்' என்று தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் 218 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதேசமயம் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்று 143 ரன்களையும், பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் 345 ரன்களையும் குவித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒருங்கிணைந்த மும்பை & சென்னை அணியின் கேப்டனாக ஜாம்பவானை நியமித்த ரோஹித், ரெய்னா!