ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கி பிசிசிஐ-ஆல் 7 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இந்த ஆண்டு ரஞ்சி ட்ராபியில் ஆட வாய்ப்புள்ளதாக சில நாள்களுக்கு முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
37 வயதாகும் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் வரும் செப்டம்பர் மாதத்தோடு முடிவடையவுள்ளது. இதையடுத்து அவர் கேரள ரஞ்சி அணிக்காக களமிறங்கப் போகிறார் என்ற செய்தி வெளியானதும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.
இதுகுறித்து ஸ்ரீசாந்த் பேசுகையில், ''நான் போட்டியிடுவதற்காக விளையாடவில்லை. எனது அனுபவங்களைப் பகிர்ந்தும்கொள்வதற்காக ரஞ்சி டிராபி போட்டியில் களமிறங்குவேன். ஒருவேளை தேர்வுக் குழுவினர் என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தால், இந்திய அணிக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட விரும்புகிறேன். என் முயற்சி தோல்வியில் முடிவது பற்றி கவலையில்லை.
இந்த வாய்ப்புக்காக நான் நெடுநாள்களாகக் காத்திருக்கிறேன். எனது கடினமான நாள்களில் என்னுடன் இருந்த ரசிகர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்'' என்றார்.