இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சர்ச்சைக்குரிய பயிற்சியாளராக திகழ்ந்தவர் கிரேக் சாப்பல். முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான இவர் 2005 முதல் 2007ஆம் ஆண்டுவரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஜான் ரைட்டை போலவே இவரவும் இந்திய அணியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்தும் தலைகீழாக நடந்தது.
பேட்டிங் வரிசையில் மாற்றம் கொண்டுவந்தது, வீரர்களின் ஆட்டத்தை மாற்றச் செய்தது உள்ளிட்ட பல விஷயங்களில் இவர் மீது ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதேசமயம்அணியில் மூத்த வீரர்களுடன் இவருக்கு முரண்பாடு ஏற்பட்டது. குறிப்பாக, அப்போது கேப்டனாக இருந்த கங்குலி ஃபிட்னஸ் காரணமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது ஒருபக்கம் இருந்தாலும் அப்போது அணியில் இளம் வீரர்களாக அறியப்பட்ட சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோரின் வளர்ச்சிக்கு கிரேக் சாப்பிலின் பங்களிப்பும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தோனி குறித்து கிரேக் சாப்பில் தனது பேஸ்புக் லைவில் பேசுகையில்,
"தோனியின் பேட்டிங்கை நான் முதல்முறை பார்த்தபோது திகைத்துபோனேன். அவர் அசாதாரண நிலையில் இருந்து பந்தை அடிக்கும் திறன் படைத்தவர். நான் பார்த்ததில் சிறந்த அதிரடி வீரர் அவர்தான். இலங்கை அணிக்கு எதிராக அவர் விளாசிய 183 ரன்கள் இன்னும் நினைவில் இருக்கிறது.
தனது பவர் ஹிட்டிங்கில் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாசினார். அந்தப் போட்டி முடிவடைந்த பிறகு புனேவில் அடுத்த போட்டி நடைபெறவிருந்தது. அப்போது நான் தோனியிடம், நீ ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி அடிப்பதற்கு பதில் ஏன் பந்தை தரையோடு தரையாக ஆடக்கூடாது எனக் கூறினேன். அப்போட்டியில் 260 ரன்கள் இலக்குடன் விளையாடி வந்த இந்திய அணி சிறப்பான நிலையில் இருந்தது.
இரண்டு நாள்களுக்கு முன் அதிரடியாக ஆடிய தோனி அப்போது அதிரடி காட்டாமல் நிதானமான ஆடிவந்தார். அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைபட்டபோது தோனி 12ஆவது வீரர் ஆர்.பி. சிங்கிடம் இப்போது சிக்சர் அடிக்கலாமா எனக் கேட்டார். அதற்கு நான் வெற்றி இலக்கு ஒற்றை இலக்கில் வரும்வரை சிக்சர் அடிக்க வேண்டாம் என கூறினேன். பின்னர் அணியின் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டபோது தோனி சிக்சர் அடித்து ஆட்டத்தை ஃபினிஷ் செய்தார்" என தெரிவித்தார்.
இந்நிலையில், கிரேக் சாப்பல் கூறிய இந்தக் கருத்துக்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி தந்துள்ளார். தனது பதிவில், அவர் தோனியை பந்தை தரையோடு தரையாக ஆடச் சொன்னார். ஏனெனில் தனது வித்தியாசமான ஆட்டத்தால் அணியிலிருந்து அனைவரையும் வெளியேற்றிவந்தார் என பதிவிட்டார். மேலும் கிரேக் சாப்பலின் பயிற்சியின் கீழ் இந்திய அணி விளையாடியது மிகவும் மோசமான நாள்கள் என தெரிவித்து #worstdaysofindiancricketundergreg என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:கேப்டன்சியை பிரித்துக் கொடுப்பதில் விராட் கோலி உடன்பாடிருக்காது...!