தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடத்தில் இலங்கை! - Srilanka points table

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடத்தில் இலங்கை

By

Published : Aug 19, 2019, 11:36 PM IST

டெஸ்ட் போட்டிகளை மேம்படுத்தும் வகையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் உள்ளிட்ட ஒன்பது அணிகள் 27 டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளன. அதில், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா (ஆஷஸ்), இலங்கை - நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா

ஒவ்வொரு தொடருக்கும் மொத்தம் 120 புள்ளிகள் வழங்கப்படும். அந்தத் தொடரில் மொத்தம் எத்தனை போட்டிகள் உள்ளதோ அதற்கு ஏற்றார் புள்ளிகள் பிரிக்கப்பட்டு அணிகளுக்கு வழங்கப்படும்.

இரண்டு ஆண்டுகள் நடைபெறும் இந்தத் தொடரில் புள்ளிகள் கணக்கில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், இலங்கை அணி முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இலங்கை

அதேசமயம், ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அதில், முதல் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி இரண்டாவது போட்டியில் டிரா செய்தது. இதனால், 1-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் இணையதளம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அணி ஒரு வெற்றியுடன் 60 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அவர்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி தலா ஒரு வெற்றி, ஒரு டிரா என 32 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணி ஒரு டிரா, ஒரு தோல்வி என எட்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 22ஆம் தேதியில் மட்டும் மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளன. ( இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்)

புள்ளிகள் வழங்கப்படும் முறைகள்

போட்டிகள் கொண்ட தொடர் வெற்றி டை

டிரா

தோல்வி
இரண்டு 60 30 20 0
மூன்று 40 20 13 0
நான்கு 30 15 10 0
ஐந்து 24 12 8 0

ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர். அதேசமயம், இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்தான் நடைபெற்று வருகிறது. இதனால்தான், புள்ளிகள் வழங்குவதில், மாற்றங்கள் இருக்கின்றன. இருப்பினும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில், தற்போது இலங்கை அணி முதல் இடத்தில் இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள், அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... என வாயடைத்துப் போய் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details