விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று ஒயிட் வாஷ் செய்தது. இதன் மூலம், இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. ஐசிசி அறிமுகப்படுத்திய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் இந்தத் தொடர்கள் நடைபெற்று வருகிறது.
தரவரிசைப் பட்டியலில் உள்ள ஒன்பது அணிகள் தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றன. அதில், மூன்று தொடர்கள் அவர்களது சொந்த மண்ணிலும், மூன்று தொடர்கள் அந்நிய மண்ணிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். அந்தத் தொடரில் மொத்தம் எத்தனை போட்டிகள் உள்ளதோ அதற்கு ஏற்றார்போல் புள்ளிகள் பிரிக்கப்பட்டு அணிகளுக்கு வழங்கப்படும்.
அதனடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில், இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று 120 புள்ளிகளை பெற்றது. தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்று 120 புள்ளிகளை எடுத்துள்ளது.
இதனால், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்று 240 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, இலங்கை அணி தலா 60 புள்ளிகளுடன் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் 56 புள்ளிகளுடன் நான்காவது,ஐந்தாவது இடத்தில் உள்ளன.