இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளன.
இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராகி விட்டதா? என்ற கேள்விக்கு, முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை வெல்வதைப் பார்ப்போம். அதன்பிறகு உலகக்கோப்பை தொடரைப் பற்றி யோசிக்கலாம். ஏனெனில் அடுத்தடுத்து தொடர்களில் வெற்றிபெறுவதன் மூலம்தான் ஒரு அணி வலிமை பெற முடியும் என பதிலளித்தார்.
ரோஹித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்த காணொலியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது அந்தக் காணொலி ரோஹித் சர்மா ரசிகர்களிடையே ட்ரெண்டாகிவருகிறது.
இதையும் படிங்க: சாஹலுக்கு விருந்து உறுதி - ரோஹித் சர்மா!