மகளிர் கிரிக்கெட்டில் தலைசிறந்த தொடக்க வீராங்கனையாக திகழ்பவர் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தானா. ஒருநாள், டி20 என ஃபார்மேட் மாறினாலும் இவரது ஆட்டம் மட்டும் மாறவே மாறாது. இடதுகை வீராங்கனையான இவர் ஆடும் ஷாட்டுகள் அனைத்தும் துல்லியமாக இருக்கும். இதனால், இவருக்கென தன ரசிகர்கள் பட்டாளமே உள்ளன. இந்தியா மட்டுமின்றி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளிலும் இவர் தனக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
2017ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மூலம் மந்தானா, கிரிக்கெட்டில் அசூர வளர்ச்சி பெற்றார். அந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து பேக் டூ பேக் இரண்டு சதங்களை விளாசி அசத்தினார். இவர் அணிக்கு தந்த சிறப்பான ஓப்பனிங்கால் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றது. இதைத்தொடர்ந்து, 2018இல் இவரது ஃபார்ம் அடுத்த கட்டத்துக்கு சென்றது, இந்திய அணியின் பேட்டிங்கிற்கு பலத்தை தந்தது. கடந்த ஆண்டில் 12 ஒருநாள் போட்டிகளில் ஆடிய இவர், 7 அரைசதம், ஒரு சதம் என 669 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.