இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் நான்காவது போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. மூன்று அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்ததால், இந்தப் போட்டி மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் க்நைட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் இந்திய அணிக்காக ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்த நிலையில், இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 45 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 23 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பாக ஆன்யா ஷ்ரப்சோல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஏமி எலன் - டேனியல் இணை தொடக்கம் கொடுத்தது. அதில் ஏமி 1 ரன்னிலும், டேனியல் 14, ப்ரண்ட் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 28 ரன்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து அதிரடியாக ஆடிய நடாலி ஒருமுனையில் வேகமாக ரன்களைச் சேர்க்க, அவருக்குத் துணையாக கேப்டன் க்நைட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.