கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.
அதன்படி அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய அலிசா ஹீலே ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி அணிக்கு அதிரடியான தொடக்கத்தை தந்தார்.
மறுமுனையில், பெத் மூனியும் தன் பங்கிற்கு அவ்வபோது பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினார். இந்த ஜோடியின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பந்துவீச்சு வீராங்கனைகள் திணறுகின்றனர். குறிப்பாக, ராஜேஸ்வரி ஜெய்க்வாத் வீசிய எட்டாவது ஓவரில் அலிசா ஹீலே இரண்டு சிக்சர்கள் உட்பட 16 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து, ராதா யாதவ் வீசிய 10ஆவது ஓவரில் அலிசா ஹீலே பவுண்டரி அடித்து 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் ஷிகா பாண்டே வீசிய 11ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார். இதனால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைச் சேர்த்தது.
ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்களை எட்டிய நிலையில், ராதா யாதவ் பந்துவீச்சில் அலிசா ஹீலே 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில் ஏழு பவுண்டரிகளும், ஐந்து சிக்சர்களும் அடங்கும். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் மெக் லானிங் 15 ரன்களிலும், ஆஷ்லி கார்ட்னர் இரண்டு ரன்களிலும் அடுத்தடுத்து தீப்தி ஷர்மாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.