ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், மெல்போர்னில் இன்று நடைபெற்ற 14ஆவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்தத் தொடரில் இரு அணிகளும் விளையாடும் கடைசி லீக் போட்டி இதுவாகும்.
இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தாலும், இந்திய அணிக்கு இப்போட்டி அதற்கான முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்பட்டது. மறுமுனையில், மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியடைந்த இலங்கை அணி, இப்போட்டியிலாவது ஆறுதல் வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ராதா யாதவ் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் சமாரி அத்தாபட்டு 33 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ராதா யாதவ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 114 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடியாக விளையாடியது. இந்த ஜோடி 47 ரன்களைச் சேர்த்த நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் 15 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் மறுமுனையில் ஷஃபாலி வர்மா பொறுப்புடன் விளையாடிவந்தார்.
கடந்த இரண்டு போட்டிகளில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட அவர் இம்முறை அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 47 ரன்களில் ரன் அவுட்டானார். இறுதியில், இந்திய அணி 14.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்களை எட்டியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகியோர் தலா 15 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.
இதனால், இந்திய அணி இப்போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின்மூலம், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று எட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இப்போட்டியில் அபாரமாகப் பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ராதா யாதவ் ஆட்டநாயகி விருதைப் பெற்றார்.
இதையும் படிங்க:தோனியின் ரசிகனாக கபில்தேவ் கருத்து - உற்சாகத்தில் ரசிகர்கள்!