ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 19ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இதில், குரூப் பி பிரிவில் உள்ள கத்துக்குட்டி அணியான தாய்லாந்து, பாகிஸ்தானுடன் மோதியது. தாய்லாந்து அணி பங்கேற்கும் முதல் உலகக்கோப்பை இதுவாகும். சிட்னி ஷோகிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இந்தத் தொடரில் தாய்லாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் படு தோல்வியடைந்ததால், இன்றையப் போட்டியிலும் அந்த அணி பெரிதாக விளையாடாது என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், அந்த நினைப்பை தாய்லாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளான நட்டகன் சன்தம், நட்டயா பூச்சதம் ஆகியோர் தவிடி பொடியாக்கினர்.
இந்த ஜோடி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு, அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதுவரை தாய்லாந்து அணி இந்தத் தொடரில் அதிகபட்சமாக எடுத்த ஸ்கோரான 82 ரன்களை, இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு முறியடித்தது. தாய்லாந்து அணி 13.3 ஓவர்களில் 93 ரன்களை எடுத்திருந்த நிலையில், நட்டயாக பூச்சதம் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நட்டகன் சன்தம் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 50 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் தாய்லாந்து அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்து 150 ரன்களைக் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தாய்லாந்து அணி டி20 போட்டிகளிலும், உலகக்கோப்பை டி20 போட்டிகளிலும் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மறுமுனையில் பாகிஸ்தான் டி20 போட்டிகளில் 15 முறை முயற்சித்தும் இதுவரை ஒருமுறைக்கூட 150 ரன்களை சேஸ் செய்ததில்லை. இதனால், இப்போட்டியில் தாய்லாந்து அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தன.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி களமிறங்குவதற்கு முன் மைதானத்தில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து கனமழை பெய்துவந்ததால், இப்போட்டி முடிவு எட்டப்படாமலேயே முடிந்தது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம், தாய்லாந்து அணி ஒரு புள்ளியுடன் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி மூன்று புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க:மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து எல்லீஸ் பெர்ரி விலகல்