இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மார்ச் 8ஆம் தேதி நடக்கவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுவரை எந்தவொரு மகளிர் கிரிக்கெட் தொடருக்கும் கிடைக்காத அளவிற்கு இந்த டி20 தொடருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு மிக முக்கியக் காரணமாக இந்திய அணி.
இந்திய அணி வீராங்கனை ஷஃபாலி வர்மாவின் அதிரடியும், ஸ்மிருதி மந்தனாவின் ஆக்ரோஷமான ஷாட்டுகளும் மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தியுள்ளது. அதிலும் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா எந்தப் பந்துவீச்சாளராக இருந்தாலும் அச்சமின்றி எதிர்கொள்வது பலரையும் ஈர்த்துள்ளது.
இறுதிப்போட்டி குறித்து ஆஸ்திரேலியா வீராங்கனை மேகன் ஷட் பேசுகையில், ''இந்திய அணிக்கு எதிராக ஆடுவதை எப்போதும் வெறுக்கிறேன். ஏனென்றால் இந்திய வீராங்கனைகள் எப்போதும் எனது பந்துவீச்சில் அதிக ரன்களை எடுத்துள்ளனர். முத்தரப்புத் தொடரின்போது அடிக்கப்பட்ட சிக்சர் இன்னும் எனது நினைவில் உள்ளது. ஷஃபாலி, ஸ்மிருதி இருவருக்கும் பவர் ப்ளேயில் பந்துவீசுவது கடினம்.
இந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு வரவேண்டும் என்பதை எப்போதும் மனத்தில் வைத்திருந்தோம். அதில் இந்திய அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் ஆடுவது பெரும் சவாலாக இருக்கப்போகிறது.