2018ஆம் ஆண்டு ஐசிசி பெண்கள் கிரிக்கெட் கூட்டத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் பேசும்போது, பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சி பற்றிய முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அதில், ’’2017ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பைக்கு பிறகு இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் ஒரு எனர்ஜியை உருவாக்கியுள்ளது. இது மகளிர் கிரிக்கெட்டிற்கு மிகச்சிறந்த தருணம்.
இனி மகளிர் கிரிக்கெட்டை யாராலும் புறந்தள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் குறித்த பேச்சு ஆடவர் கிரிக்கெட்டோடு நின்றுவிடாமல், ஆண் ரசிகர்களோடு நின்றுவிடாமல் பெண்களிடமும் சென்றுள்ளது. ஒவ்வொரு சாமானியரும் மகளிர் கிரிக்கெட் குறித்து தெரிந்துகொள்கிறார்கள், பார்த்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு போட்டிக்கும் பார்வையாளர்கள் அதிகமாகியுள்ளனர். இதனை நாம் தொடர்ந்து செய்யவேண்டும்’’ என்றார்.
இந்த தசாப்தத்தில் மகளிர் கிரிக்கெட் குறித்து பார்க்கையில், மகளிர் கிரிக்கெட்டை ஒளிபரப்புவது அதிகமாகியுள்ளது, நட்சத்திர வீரர்களுக்கான ஊதியங்களும் ஒப்பந்தங்களும் அதிகரித்துள்ளன. மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பெரும் முன்னேற்றமடைந்துள்ளது.
தற்போது மகளிர் கிரிக்கெட்டை பின்பற்றுபவர்களுக்கு ஏமாற்றத்தையளிக்கும் விஷயங்கள் என்னவென்றால், மகளிர் கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் ஆடாதது மட்டுமே. ஆனால் மகளிர் கிரிக்கெட் குறுகிய போட்டிகளில் ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளது. அந்தப் பாதையில் மிகத் தெளிவாகவும், வெற்றிகரமாகவும் பயணிக்கிறது. 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20 மகளிர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் மற்றும் 2018ஆம் ஆண்டு கரீபியனில் நடந்த ஸ்டாண்ட் அலோன் (standalone) டி20 உலகக்கோப்பையும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அணிகளின் முன்னேற்றம்:
ஐசிசி தொடர்களைப் பார்க்கையில் இந்த 10 ஆண்டுகளில் 7 உலகக்கோப்பைத் தொடர் நடந்துள்ளது. அதில் ஆஸ்திரேலியா அணி 6 முறை இறுதிப் போட்டிகளுக்கு சென்றது, அந்த 6 போட்டிகளில் 5 முறை வெற்றியும் பெற்று கோப்பையைக் கைப்பற்றி விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணி 2017ஆம் ஆண்டு நடந்த சம்மிட் க்ளாஷில் இறுதிக்கு தகுதிபெறவில்லை. அந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் ஆடிய ஆட்டம் இந்த தசாப்தத்தில் ஆடப்பட்ட மிகச்சிறந்த ஆட்டம். அந்த ஆட்டம்தான் 2018ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்புக்கு பெரும் வித்திட்டது. அந்த உலகக்கோப்பையில் கிடைத்த வரவேற்பால்தான் மகளிர் கிரிக்கெட்டின் உள்கட்டுமான அமைப்புகள் மாற்றம் காணத் தொடங்கின. இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்திய ரசிகர்களிடையே நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.