2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 50 பதக்கங்களைப் பெறவேண்டும் என்ற குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களோடு 2016ஆம் ஆண்டு நிதி அயோக் குழு ஒரு திட்டத்தை மக்கள் முன் வைத்தபோது, அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஆனால் அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை இந்தியன் ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதனை நிறைவேற்றுவதற்கு சில சின்னச்சின்ன இலக்குகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் நிர்ணயித்தது. இந்த இலக்குகளை நினைக்கையில் கூடவே நம் மனதில், புதிய தசாப்தத்தில் இந்த திட்டங்கள் நிறைவேறுவதற்கான நடைமுறை சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
அந்தத் திட்டம் என்னவென்றால், 2021ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை நடத்துவதுடன் 2026ஆம் ஆண்டுக்கான யூத் ஒலிம்பிக் கேம்ஸ் மற்றும் 2030ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு ஆகிய போட்டிகளை நடத்த ஆறு மாதத்திற்கு முன்னதாக இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்தர் பத்ரா கூறியிருந்தார்.
இந்தத் திட்டம் ஆசிய போட்டிகளோடு நின்றுவிடவில்லை. அது 2026 (அ) 2030ஆம் ஆண்டு காமன்வெல்த் கேம்ஸ் மற்றும் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் திட்டம் உள்ளது என்றார்.
ஒலிம்பிக் போன்ற பெரும் விளையாட்டு போட்டிகளை இந்தியா போன்ற நாடு நடத்துவதற்கு அனுமதி கிடைக்குமா என்றால், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியா சரியாக நடத்தினால், ஒலிம்பிக் போட்டிகளை நடத்த நிச்சயம் அனுமதி கிடைக்கும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்புகிறது.
2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என யோசிக்கையில், இந்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான செலவுகளைவிட மூன்று மடங்கு அதிகமாகும், அதாவது ரூ.1,85,000 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகள், அந்த நேரத்தில் மாறவும் செய்யலாம். இதனிடையே 2032ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தென் கொரியா, வட கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன.
குறைந்தது 16 விளையாட்டு மதிப்புமிக்கப் போட்டிகளை (இறுதி செய்யப்படவில்லை) நிச்சயம் நடத்திடவேண்டும் என இந்தியா ஆர்வம் காட்டிவருகிறது. அதேபோல் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகளையும் விளைவுகளையும் சிறிதும் சிந்திக்காமல், இந்திய ஒலிம்பிக் சங்கம் போட்டிகளை நடத்துவதில் ஏன் ஆர்வம் காட்டிவருகிறது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
சில மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதால் சியோல், லண்டன், பார்சிலோனா உள்ளிட்ட நாடுகளில் உள்கட்டமைப்பு, சுற்றுலா, சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பு ஆகியவை உயர்ந்துள்ளது. ஆனால் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதால் சில நாடுகளில் பெரும் விளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. 1976ஆம் ஆண்டுக்கான மாண்ட்ரியல் விளையாட்டுப் போட்டிகளை கனடா நடத்தியது. இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தியால், கனடா நாட்டின் பட்ஜெட்டில் பற்றாக்குறையே ஏற்பட்டது. இந்த பிரச்னையிலிருந்து வெளிவர முடியாமல் சுமார் 40 ஆண்டுகள் கனடா தவித்தது.
2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் ஒலிம்பிக் போட்டி நடத்தியதால் ஏற்பட்ட செலவினங்களில் இருந்து இன்றுவரை கிரீஸ் மீளமுடியாமல் உள்ளது. ஃபிஃபா உலகக்கோப்பை தொடருக்காக தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கட்டப்பட்ட மைதானங்கள், அந்தத் தொடருக்கு பின் ஏன் கட்டப்பட்டது என இன்றுவரை தெரியாமல் உள்ளது. ஏன் இந்தியாவிலும் 10ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்காக கட்டப்பட்ட மைதானங்களில், பாதிக்கும்மேல் இன்று வரை பயன்படுத்தப்படாமல் உள்ளது.
காமன்வெல்த் போட்டிகளின் தொடக்கம் மற்றும் முடிவு விழாக்கள் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் ஜவஹர்லால் நேரு மைதானத்தைப் புதுப்பிப்பதற்காக ரூ.960 கோடி செலவிடப்பட்டது. அதையடுத்து ஜவஹர்லால் நேரு மைஹானம் கவனிப்பாடின்றி உள்ளது. இப்படி கவனிக்கப்படாமல் இருப்பதற்காக தான் ரூ. 960 கோடியும் செலவிடப்பட்டதா?