உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரசால், இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 1.90 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலகில் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இதனால் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து, ஒலிம்பிக் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தாண்டு ஜூன் மாதம் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் கரோனா வைரஸ் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜானி கிரேவ் கூறுகையில், ”இங்கிலாந்து அணியுடன் ஜூன் மாதம் நாங்கள் விளையாட இருந்த டெஸ்ட் தொடர், தற்போது நிலவும் சூழல் காரணமாக எங்களால் நடத்த இயலாது. மேலும் இத்தொடரின் புதிய தேதிகள் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும், சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடமும் நாங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கரோனாவால் ஜூலை மாதம் வரை எந்தவித கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'உலகக்கோப்பையை வெல்வதே என்னுடைய லட்சியம்' - ரோஹித் சர்மா!