Age is just a number என்று ஆங்கிலத்தில் பழமொழி உண்டு. சாதிப்பதற்கு வயது ஒருபோதும் தடையாக இருக்காது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்பவர் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த சிசில் ரைட். கிரிக்கெட் மீது இவருக்கு இருக்கும் அளவிற்கு மற்ற வீரர்களுக்கு ஈடுபாடு இருக்குமா என்றால் அது சந்தேகம்தான். ஏனெனில், கிரிக்கெட்டில் இவர் பயணித்த வருடங்கள் சச்சினைவிடவும் அதிமானவை. இவர் விளையாடிய போட்டிகளைக் கணக்கிட்டால் அந்த கணக்கும் பயந்து நடுங்கும்.
வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்டுகளான கேரி சோபர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், ஜோயல் கார்னர் ஆகியோருடனும் இவர் விளையாடியுள்ளார். ஆனால், இவரது பெயர் அந்த லெஜெண்ட் லிஸ்டில் இடம்பெறவில்லை என்றாலும், வரலாற்றில் நீண்ட வருடங்கள் விளையாடியதற்காக நிச்சயம் இடம்பெறும்.
பொதுவாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான வீரர்கள் 34 வயதிலேயே ஓய்வு பெறும் நிலையில், இவர் தனது முதல் தர போட்டியில் 34 வயதில்தான் அறிமுகமானார். ஆம், 1959இல் பார்படாஸ் அணிக்கு எதிரான முதல் தர போட்டியில் ஜமைக்கா அணிக்காக தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.
பின்னர் அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு சென்ற இவர், சென்ட்ரல் லாங்கன்ஷையர் லீக் தொடரில் க்ராம்ப்டன் அணிக்காக விளையாடினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு அதே நாட்டில் இருக்க முடிவு எடுத்துள்ளார்.
ஒருகட்டத்தில் இவருடன் விளையாடிய வீரர்கள் எல்லாம் ஓய்வு பெற்றபோதிலும், 30ஸ் கிட் ஆன இவர் தலைமுறைகள் கடந்து 80ஸ், 90ஸ், 2000 கிட்ஸுடனும் விளையாடியுள்ளார். ஆம் வலதுகை பந்துவீச்சாளரான இவர் 60 வருட பயணத்தில் இதுவரை 7000 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.