இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. நேற்று நடைபெற்ற (மார்ச் 5) இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய தனுஷ்கா குணதிலக - நிசான்கா இணை தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த குணதிலக அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 37 ரன்களில் நிசான்கா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து குணதிலகவும் 56 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின்னர் 161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் அதிரடி வீரர்களான லிண்டல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், ஜோல்டர், பிராவோ என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் சென்றனர்.
பின்னர் வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். இதனால் 18.4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் சண்டகன், ஹசரங்கா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் இலங்கை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய ஹசரங்கா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!