ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கிடையே பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பிரிஸ்பேனில் உள்ள உணவகம் ஒன்றுக்கு செல்வதற்காக தனது கால் டாக்சியில் பயணித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் வாங்க மறுத்த இந்திய கார் டிரைவருக்கு கைமாறாக, பாகிஸ்தான் வீரர்கள் விருந்தளித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா விவரித்துள்ளார். அந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
"பிரிஸ்பேனில் இந்தியா அல்லது பாகிஸ்தான் சார்ந்த உணவகம் எங்கு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இதனால், கால் டாக்ஸியை அழைத்தோம். அதில் கார் டிரைவராக இருந்த இந்தியரிடம் நாங்கள் உருது மொழியில் இங்கு உள்ள நல்ல உணவகத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டோம்.
நாங்கள் யார் என்பதை கண்டறிந்த அவர், எங்களிடம் கிரிக்கெட் குறித்து பேச்சு கொடுத்து வந்தார். பின் உணவகம் வந்தவுடன் அவர் எங்களிடம் பணம் வாங்க மறுத்துவிட்டார். இதனால், நான் அவரிடம், ஒன்று பணம் வாங்கிக்கொள்ளுங்கள் இல்லையெனில் எங்களுடன் உணவருந்த வாருங்கள் என அழைத்தோம். அதை ஏற்றுகொண்ட அவர் எங்களுடன் சேர்ந்து ஜாலியாக உணவருந்தினார்" என அந்த வீடியோவில் யாசிர் ஷா குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தான் வீரர்களிடம் இந்தியர் காட்டிய பாசமும், அதற்குக் கைமாறாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியரிடம் காட்டிய நேசமும், ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.