ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் ஆட பணித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும் பின்னர் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே ஆகியோரின் ஆட்டத்தால் எழுச்சி கண்டது.
பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் அவரை நியூசிலாந்து பவுலர்கள் நீல் வாக்னர், டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தங்களின் அசாதாரண பந்தவீச்சால் திணறடித்தனர்.
அப்போது வீசப்பட்ட ஒரு பந்தை எதிர்கொண்ட வேட், மைதானத்தில் நிலைதடுமாறினார். அவர் நிலைதடுமாறிய இந்தப் புகைப்படத்தை பிரபல அமெரிக்க பாப் இசை பாடகரான மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளோடு ஒப்பிட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். மேலும், வேட் நீங்க நல்லா இருக்கீங்களா என கேலியாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தனர். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
இப்போட்டியில் வேட் 38 ரன்கள் எடுத்த நிலையில் கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் வாட்லிங்கிடம் பிடிபட்டார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்களை எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 77, டிராவிஸ் ஹெட் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஹாட்ரிக் தங்கம் வென்ற அஞ்சும் முட்கில்