சமீபகாலமாக, கிரிக்கெட்டில் அம்பயர்கள் தவறான தீர்ப்புகள் தருவது வழக்கமாக உள்ளது. உலகக்கோப்பை தொடரோடு அம்பயர்களின் அலட்சியம் முடியும் என்று பார்த்தால், அது முடியாமல் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்வரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. ஃபார்மெட் மாறுகிறது, அம்பயர்கள் மாறுகிறார்களே ஒழிய அவர்களது தீர்ப்பில் வரும் தவறுகள் மட்டும் மாறுவதே இல்லை. இந்த சுழலில், பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஜோயல் வில்சன், அலீம் டார் ஆகியோர் கள நடுவர்களாக இருந்தனர்.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றாலும், ஸ்டீவ் ஸ்மித், நாதன் லயான் ஆகியோரது புகைப்படங்களைவிட இவர்களது புகைப்படம்தான் ட்விட்டர், பேஸ்புக் ஆகிய சமூகவலைதளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இப்போட்டியில் மட்டும் இவ்விரு அம்பயர்களும் 15 முறை தவறான தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதில், ஜோயல் வில்சன் மட்டும் 10முறை இரு அணிகளுக்கும் தவறான தீர்ப்பு வழங்கினார்.