டெஸ்ட் கிரிக்கெட்டின் தனித்துவமே நிதானமான ஆட்டத்தை கடைப்பிடிப்பதுதான். சில சமயங்களில் வீரர்களின் நிதானமான ஆட்டம் ரசிகர்களை ’உச்’ சொல்லவைக்கும். அந்தவகையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டமும் அவ்வாறே இருந்தது. நேற்று நியூசிலாந்துக்கு எதிராக சிட்னியில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதல் ரன் எடுக்க 39 பந்துகளை அவர் எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் தென்பட்டது.
இந்தத் தொடரில் அவர் தொடர்ந்து நான்கு முறையும் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் நீல் வாகனரிடமே அவுட்டானதால் இப்படியான ஒரு இன்னிங்ஸை விளையாடினார். 39ஆவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித் தனது முதல் எடுத்தபோது ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷத்தை எழுப்பினர்.
ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த இன்னிங்ஸை ஓவர்டேக் செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட் 12 ஆண்டுகளுக்கு முன்னரே விளையாடியுள்ளார். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதே சிட்னி மைதானத்தில் அவர் அப்படி விளையாடியதுதான் அதன் ஸ்பெஷாலிட்டி. 2007-08ஆம் ஆண்டில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.