ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் டி20 போட்டி மழையினால் முடிவு இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது, கடைசி டி20 போட்டியானது நேற்று பெர்த்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஆஸ்திரேலியா அணிக்காக ஐந்தாண்டு கழித்து வேகப்பந்துவீச்சாளரான சீன் அப்போட் களமிறக்கப்பட்டார். இவர் இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடியிருந்தார்.