இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. தற்போது அந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் யாரும் எதிர்பாராத வகையில் இளம் வீரர்களான லூவிஸ், ஹெய்மயர் இருவரும் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் டேரன் பிராவோ, போவ்மன் போவல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக்குழு தலைவர் ரோஜர் ஹார்பர் பேசுகையில், ''இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது எளிதானதல்ல. அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். இந்தத் தொடரில் வென்றால் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பிராவோ, போவல் ஆகியோர் அணிக்கு திரும்பியிருப்பது எழுச்சியைக் கொடுக்கும் என நம்புகிறேன். பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சரியான விகிதத்தில் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் நிச்சயம் தொடரைக் கைப்பற்றுவோம்'' என்றார்.