இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு விழாவின் போது, தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 258 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதன் காரணமாக, இலங்கையில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டது. மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடம் கடந்த நிலையில், இதில் உயிரிழந்தோரின் முதலாமாண்டு நினைவஞ்சலில் இன்று செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்காரா, இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "அனைத்து இலங்கை மக்களும் தோளுக்கு தோள்கொடுத்தும், இதயத்திற்கு இதயம் கொடுத்தும் ஒற்றுமையுடன் நிற்கிறோம். நாம் அந்த வலியையும், நிகழ்வையும் என்றும் மறக்கமாட்டோம். எங்களது கேள்விகளுக்கு முழுமையான பதில் கிடைக்கும் வரை நாங்கள் காத்திருப்போம்" என்று பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தோனிக்காக பாடல் பாடிய 'சாம்பியன்' பிராவோ