நியூசிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தவர் கிரிகோர் ஜான் பார்க்லே. இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடன் பேசிய பார்க்லே, உலக கிரிக்கெட்டில் இந்தியா அளிக்கும் பங்களிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும், இருப்பினும் ‘பிக் த்ரீ’ (Big Three) கோட்பாட்டை என்னால் ஆதரிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பார்க்லே, “என்னைப் பொறுத்தவரை மூன்று பெரிய வாரியங்கள் (பிக் த்ரீ) என்பதெல்லாம் கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டில் எல்லாருமே முக்கியமானவர்கள் தான். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். பெரிய தொடர்களை நடத்துவது, நிறைய வருவாய் உருவாக்குவது போன்ற சில விஷயங்களைச் சில பெரிய தேசங்களால் தர முடியும். ஆனால் அதற்காகத் பிக் த்ரீ வாரியங்கள் என்றெல்லாம் நினைக்க முடியாது.
மேலும் உலக கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியாவின் பங்களிப்பானது பலமடங்கு உயர்ந்துள்ளது. அதனால் அவர்களை ஐசிசி குறைத்து மதிப்பிடக்கூடாது. மேலும் இந்தியா போன்ற நாடுகளுடனான தொடரின் போது ஐசிசிக்கு அதிகப்படியான வருவாய் கிடைக்கிறது. மேலும் ஐசிசியின் வருவாய்யை பெருக்கவேண்டு மெனில் நாம் மகளிர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.