கரோனா வைரஸால் அனைத்து உலக நாடுகளும் அச்சுறுத்தலை சந்தித்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் இந்த வைரஸுக்கு 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இம்மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 தொடரும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ‘இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளை நேரில் காண இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தற்போது நிலவும் சூழலினால் இன்னும் 4-5 மாதங்களுக்கு எந்த விளையாட்டுப் போட்டிகளையும் நேரில் காண முடியாது. இது தற்போதுள்ள வீரர்களுக்கு மட்டுமில்லாமல், ரசிகர்களும் இதனைப் பின்பற்றுவது கடினமாக இருக்கும்.
ஏனெனில் ஓவ்வொரு விளையாட்டிற்கும் தனித்தனியே ரசிகர்கள் உண்டு. அவர்கள் தங்களது விளையாட்டுப் போட்டிகளை நேரில் பார்க்கவே ஆசைப்படுவர். தற்போது அவர்கள் தொலைக்காட்சி வாயிலாக தங்களது விளையாட்டுகளைக் காண்பதால், சலிப்படைவார்கள். இப்பிரச்னையை சரிசெய்ய அனைத்து விளையாட்டு அலுவலர்களும் தங்களுக்கென திட்டங்களை வகுக்க முடிவெடுத்துள்ளதாக நான் நம்புகிறேன்.
ஐபிஎல் தொடரை ரசிகர்களின்றி நடத்துவது என்பது இயலாத ஒன்று. ஏனெனில் வீரர்களும் ரசிகர்களின்றி மைதானத்தில் விளையாடுவது கடினம். இருப்பினும் ஐபிஎல் தொடரை ரசிகர்களின்றி நடத்துவது என்னைப் பொறுத்தவரையில் இறுதிக்கட்ட முடிவாக மட்டுமே இருக்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூதாட்ட சர்ச்சை: பாகிஸ்தானின் நட்சத்திர வீரருக்கு மூன்று ஆண்டுகள் தடை!