கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதுவரை உலகம் முழுவதும் நான்கரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்த தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் பொது வெளியில் சுற்றித்திரியும் பொதுமக்களை, காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று (மார்ச் 25) பெங்களூருவில் இளைஞர் ஒருவர் காவல்துறையினரை தாக்குவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் பல்வேறு தரப்பினரும் இச்செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுமக்களின் இச்செயலுக்கு கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த பதிவில், "காவல்துறையுடனான நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். யாரும் மறந்துவிட வேண்டாம், அவர்கள் நமக்காகத்தான் வேலைசெய்து வருகின்றனர். அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் நமது குடும்பத்தினருடன் நாம் இருப்பதற்கு ஊழைகின்றனர். ஏன் உங்களால் வீடுகளில் இருக்க முடியவில்லை. தயவு செய்து கொஞ்சமாவது விவேகமாக செயல்படுங்கள்" என்றுப் பதிவிட்டுள்ளார்.
தற்போது, இவரின் ட்விட்டர் பதிவை ஆதரிக்க ஒரு கூட்டம் இருப்பது போல், இவரின் பதிவிற்கு மாறாக பொதுமக்களை காவல்துறையினர் காரணமின்றி தாக்குவது போன்ற காணொலிகளையும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மகளிர் ஐபிஎல் தொடரை காலதாமதமின்றி பிசிசிஐ தொடங்க வேண்டும்