ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தற்போது 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிவருகின்றன. முன்னதாக கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டம் முடிவின்றி டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதை அடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது பயிற்சி ஆட்டம் பகலிரவு ஆட்டமாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ப்ரித்வி ஷா 40 ரன்களையும், சுப்மன் கில் 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மயங்க் அகர்வால், விஹாரி, ரஹானே, பந்த், சகா ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த பும்ரா - சிராஜ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியின் போது பந்துவீசிய கிரீன், பும்ரா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முற்பட்டு தலையில் காயமடைந்தார். இதைக்கண்ட நான் ஸ்டிரைக்கரில் இருந்த சிராஜ், உடனடியாக அவருக்கு உதவிசெய்தார். இக்காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு தரப்பிலிருந்து சிராஜின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.