இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக வலம்வருபவர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த சில மாதங்களாகவே திரைப்பட நடிகை நடாஷாவை காதலிப்பதாக வதந்திகள் பரவிய நிலையில், தற்போது அதற்கு தனது பாணியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாண்டியா.
பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடாஷாவிடம் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக பாண்டியா மோதிரத்தை வழங்க, அதனை சற்றும் தயக்கமின்றி நடாஷாவும் தனது விரலில் மாட்டி பாண்டியாவுக்கு முத்தமிட்ட காட்சிகள் அடங்கிய காணொலியைப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது தெரிய வந்தது.
சமீபத்தில் தனது முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டனில் அறுவைச் சிகிச்சை முடித்த பாண்டியா, தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். மேலும் அவர் நியூசிலாந்து அணியுடான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
அதேபோல் செர்பியாவை தாயகமாகக் கொண்ட நடாஷா ஸ்டான்கோவிக், 2012ஆம் ஆண்டு இந்தியாவில் குடிபெயர்ந்து பாலிவுட் படங்களில் நடித்துவருகிறார். மேலும் இவர் 2014ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த அரிமா நம்பி படத்தில் ஒரு குத்தாட்டமும் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஸ்வினின் மான்கட் ட்வீட்டிற்கு நோஸ்கட் தந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!