இந்தியாவில் டி20 கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் இன்று தொடங்க வேண்டியது. ஆனால் கரோனா வைரஸ் காரணமாக இந்தத் தொடர் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முதல் தர போட்டி ஜாம்பவானுமான வாசிம் ஜாஃபர் தனக்கு பிடித்த சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிஎஸ்கே அணியை வழிநடத்திய தோனியை தனது அணிக்கு கேப்டனாக அவர் தேர்வு செய்துள்ளார்.
வெளிநாட்டு வீரர்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில், கொல்கத்தா அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசல், ஹைதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் மலிங்கா ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். இவர்களைத் தவிர, சிஎஸ்கேவின் சுரேஷ் ரெய்னா, பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, டெல்லி அணியின் அஸ்வின், மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா ஆகியோரையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும், அவரது அணியில் 12ஆவது வீரராக ஜடேஜா இடம்பெற்றுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், இதுநான் தேர்வு செய்த சிறந்த ஐபிஎல் அணி, உங்களுக்கு பிடித்த அணிகளை நீங்கள் ஷேர் செய்யுங்கள் நான் ரீட்வீட் செய்கிறேன் என பதிவிட்டிருந்தார். சமீபத்தில் அனைத்து விதமான போட்டிகளிலும் ஓய்வுபெற்ற வாசிம் ஜாஃபர், 260 முதல் தர போட்டிகளில் 57 சதங்கள், 91 அரைசதங்கள் உள்பட 19 ஆயிரத்து 410 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விதர்பா அணியின் பயிற்சியாளராகிறார் வாசிம் ஜாஃபர்?