தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

24 ஆண்டுகள் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த 'ரஞ்சி ஜாம்பவான்' வாசிம் ஜாஃபர்! - வாசிம் ஜாஃபர் ஓய்வு

உள்ளூர் கிரிக்கெட்டின் ரன் இயந்திரமாகத் திகழ்ந்துவந்த முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

Wasim Jaffer announces retirement from all forms of cricket
Wasim Jaffer announces retirement from all forms of cricket

By

Published : Mar 7, 2020, 2:35 PM IST

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதிக்க வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் தங்களது சிறப்பான ஆட்டத்தால் சாதித்தவர்கள் ஒரு சிலரே. அந்தப் பட்டியலில் வாசிம் ஜாஃபர் என்றும் முதலிடம் வசிப்பார்.

இந்திய அணிக்காக 2000 முதல் 2008 வரை 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர், அதன்பின் இந்திய அணியில் விளையாட போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் ரஞ்சி டிராபியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரஞ்சி டிராபி தொடரில் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர், 12 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் வீரர் உள்ளிட்ட பல்வேறு மைல்கள் சாதனைகளைப் படைத்தார்.

வாசிம் ஜாஃபர்

மும்பையைச் சேர்ந்த இவர் 1996-97 ரஞ்சி சீசனில் தனது உள்ளூர் கிரிக்கெட்டை தொடங்கிய இவர் 2015-16 சீசனில் விதர்பா அணிக்காக விளையாடத் தொடங்கினார். இவரது சிறப்பான ஆட்டத்தால் ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா அணி தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றது.

கிரிக்கெட்டில் பெரும்பாலான வீரர்கள் 38 வயதில் ஓய்வுபெறும் நிலையில், இவரோ மேற்கூறிய சாதனைகளை தனது 41ஆவது வயதில் எட்டி அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்தார். குறிப்பாக, கடந்த ரஞ்சி சீசனில் 1037 ரன்களைக் குவித்து அசத்தினார். இப்படிப் பலமுறை ரசிகர்களின் புருவத்தை உயர்த்தச் செய்த அவர், தற்போது அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

வாசிம் ஜாஃபர்

இதன்மூலம், அவரது 24 ஆண்டுகள் கிரிக்கெட் பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை 260 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 57 சதங்கள், 91 அரைசதங்கள் உள்பட 19 ஆயிரத்து 410 ரன்களைக் குவித்துள்ளார். அதில், அவரது பேட்டிங் சராசரி 50.67 ரன்னாகும்.

வாசிம் ஜாஃபர்

நடப்பு ரஞ்சி சீசனில் இவர் கேரள அணிக்கு எதிராக விளையாடிய கடைசி போட்டியிலும் அரைசதம் அடித்து மிரட்டினார். தனது சிறப்பான ஃபார்மால் உள்ளூர் கிரிக்கெட்டின் பேட்டிங் ஜாம்பவான், ரன் இயந்திரம் எனப் பல பெயர்களைப் பெற்ற இவருக்குத் தற்போது ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட்டின் பெருமை சுனில் கவாஸ்கர்!

ABOUT THE AUTHOR

...view details