இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர பேட்ஸ்மேனாக அறியப்பட்ட சர்ஃபராஸ் கான், அந்த நம்பிக்கையை பொய்யாக்குவதுபோல் சில ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவந்தார். மும்பை ரஞ்சி டிராபி அணியில் இடம் கிடைக்காததையடுத்து, உத்தரப் பிரதேச அணிக்காக இரு ஆண்டுகளாக ஆடினார். ஆனால் அப்போது பேட்டிங்கில் பெரிய ரன்களை அடிக்காத நிலையில், இந்த ஆண்டு மீண்டும் மும்பை அணிக்கு திரும்பினார்.
அதையடுத்து உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 5ஆவது வீரராக களமிறங்கி 301 ரன்களை அடித்து அசத்தினார். இதனால் மீண்டும் சர்ஃபராஸ் கானின் பெயர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து சர்ஃபராஸ் கான் பேசுகையில், '' ரஞ்சி டிராபி போட்டிகளில் முச்சதம் விளாசிய மும்பை வீரர்களான சச்சின், சுனில் கவாஸ்கர், வாசிம் ஜாபர், ரோஹித் சர்மா ஆகியோரின் பட்டியலில் நானும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
2016ஆம் ஆண்டு என்னுடைய உடல்தகுதி காரணமாக ஆர்சிபி அணியிலிருந்து விலக்கப்பட்டேன். அப்போது எனது திறமையின் மீதும், பேட்டிங் பற்றியும் எவ்வித சந்தேகமுமில்லை என விராட் கோலி நேரடியாகவே கூறினார். எனது உடலை நான் அங்கிகரிக்காததால்தான் எனது பேட்டிங் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை என கூறினார்.